சென்னை
பூந்தமல்லி மற்றும் வளசரவாக்கத்தில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி
|பூந்தமல்லி மற்றும் வளசரவாக்கத்தில் ஏ.டி.எம். எந்திரங்களை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
பூந்தமல்லியை அடுத்த சென்னீர்குப்பம் பகுதியில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம். மையம் செயல்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் இரவு பணம் எடுப்பது போல் ஏ.டி.எம். மையத்துக்குள் நுழைந்த 2 மர்ம நபர்கள், தங்களிடம் இருந்த சிறிய கம்பி மூலம் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி செய்தனர். ஆனால் அவர்களால் ஏ.டி.எம். எந்திரத்தை உடைக்க முடியாததால் அங்கிருந்து தப்பிச்சென்று விட்டனர்.
அதன்பிறகு அங்கு பணம் எடுக்க வந்த வாடிக்கையாளர்கள், ஏ.டி.எம். எந்திரம் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி பூந்தமல்லி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அதில் மர்மநபர்களின் உருவம் பதிவாகி இருந்தது. மேலும் விசாரணையில் நேற்று முன்தினம் அதிகாலையில் பூந்தமல்லியில் உள்ள தனியார் வங்கி ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட அதே மர்மநபர்கள் நேற்று முன்தினம் இரவில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் ஏ.டி.எம். எந்திரத்தையும் உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர். மர்மநபர்களால் ஏ.டி.எம். எந்திரத்தை உடைக்க முடியாததால் அதில் இருந்த ரூ.40 லட்சம் தப்பியது. பூந்தமல்லி பகுதியில் அடுத்தடுத்து நடைபெற்ற இந்த ஏ.டி.எம். கொள்ளை முயற்சி சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதேபோல் வளசரவாக்கம் ஆற்காடு சாலையில் உள்ள இந்திரா நகரில் தனியார் வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம். மையம் உள்ளது. நேற்று அதிகாலை அங்கு வந்த வாலிபர் ஒருவர் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்றார்.
இதனை அங்கிருந்த கண்காணிப்பு கேமரா மூலம் மும்பையில் உள்ள சேவை மைய அதிகாரிகள் பார்த்து, சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக வளசரவாக்கம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
ஆனால் ஏ.டி.எம். எந்திரத்தை உடைக்க முடியாததால் கொள்ளையன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது தெரிந்தது. இதுகுறித்து வளசரவாக்கம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.