திருவள்ளூர்
ஏ.டி.எம். மையத்தில் டெபாசிட் எந்திரத்தை சேதப்படுத்தியவருக்கு வலைவீச்சு
|திருவள்ளூர் மாவட்டத்தில் ஏ.டி.எம். மையத்தில் டெபாசிட் எந்திரத்தை சேதப்படுத்தியவரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு சன்னதி தெருவில் இந்தியன் வங்கி இயங்கி வருகிறது. இந்த வங்கி கட்டிடத்தில் ஏ.டி.எம். மையம் அமைந்துள்ளது. இங்கு டெபாசிட் செய்ய மற்றும் பாஸ் புக் பதிவு செய்வதற்கான எந்திரம் வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த 5 நாட்களாக டெபாசிட் எந்திரம் வேலை செய்யாததால் வாடிக்கையாளர்கள் புகார் அளித்தனர். இதையடுத்து வங்கி ஊழியர்கள் எந்திரத்தை பழுது பார்த்தபோது அதில் நீர் மற்றும் பவுடர் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதற்கான காரணம் யார் என்பது குறித்து கண்டறிய ஏ.டி.எம். மையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்ததில் கடந்த 25-ந்தேதி காலை 10.30 மணியளவில் வங்கி ஏ.டி.எம். மையத்திற்குள் நுழைந்த மர்ம நபர் ஒருவர் டெபாசிட் எந்திரத்தில் தண்ணீர் ஊற்றியும், பவுடர் தூவி விட்டும் சென்றது தெரியவந்தது. இதையடுத்து வங்கி மேலாளர் பாரி டெபாசிட் எந்திரத்தை சேதப்படுத்தி சென்ற மர்ம நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருவாலங்காடு போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து போலீசார் மர்ம நபரை தேடி வருகின்றனர்.