திருவள்ளூர்
ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுக்க சென்ற சாலை பணியாளரை நூதன முறையில் ஏமாற்றிய வாலிபர் கைது
|ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுக்க சென்ற சாலை பணியாளரை நூதன முறையில் ஏமாற்றிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
திருவள்ளூர் அடுத்த சேலை கண்டிகை பகுதியை சேர்ந்தவர் லட்சுமணன் (வயது 46). திருவள்ளூரில் சாலை பணியாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் திருவள்ளூரில் உள்ள ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுப்பதற்காக சென்றார். ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் எடுக்க முயன்றபோது பணம் வரவில்லை.
இதை கண்ட, அவருக்கு பின்னால் நின்ற நபர் லட்சுமணனிடம் பேச்சு கொடுத்தார். அப்போது, தான் பணம் எடுத்து கொடுப்பதாக கூறி லட்சுமணனிடம் இருந்து ஏ.டி.எம். கார்டை வாங்கியுள்ளார். மேலும், ஏ.டி.எம். கார்டின் ரகசிய எண்ணையும் கேட்டு அறிந்தார்.
அப்போது கண்ணிமைக்கும் நேரத்தில் லட்சுமணன் கார்டுக்கு பதிலாக வேறொரு கார்டை கொடுத்துவிட்டு அங்கிருந்து தப்ப முயன்றார். அந்த கார்டை வாங்கிப் பார்த்த லட்சுமணன் இது தனது கார்டு இல்லை என அறிந்து அந்த நபரை கூப்பிட்டு உள்ளார். இருப்பினும் அந்த நபர் நிற்காமல் அங்கிருந்து தப்பி ஓட முயன்றார்.
இதை தொடர்ந்து லட்சுமணன் கூச்சலிட்டார். லட்சுமணனின் கூச்சல் சத்தத்தை கேட்டு அங்கிருந்த பொதுமக்கள் தப்பி ஓட முயன்ற நபரை மடக்கி பிடித்தனர். இந்த சம்பவம் குறித்து லட்சுமணன் திருவள்ளூர் டவுன் போலீசில் புகார் செய்தார்.
இன்ஸ்பெக்டர் பத்மஸ்ரீ பபி, சப்-இன்ஸ்பெக்டர் கணேசன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து அந்த நபரை கைது செய்தனர். போலீசார் விசாரணையில், பிடிப்பட்ட நபர் திருவள்ளூர் அடுத்த செவ்வாப்பேட்டை சிறுகடல், கங்கா நகரை சேர்ந்த சூரியபிரகாஷ் (33) என தெரியவந்தது. இதுபற்றி போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.