< Back
மாநில செய்திகள்
உதவி செய்வதுபோல நடித்து ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுக்க வந்தவர்களிடம் நூதன திருட்டு
திருவள்ளூர்
மாநில செய்திகள்

உதவி செய்வதுபோல நடித்து ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுக்க வந்தவர்களிடம் நூதன திருட்டு

தினத்தந்தி
|
9 July 2023 5:15 PM IST

ஏ.டி.எம். மையத்திற்கு பணம் எடுக்க வந்தவர்களிடம் உதவி செய்வதுபோல நடித்து ஏ.டி.எம். கார்டை மாற்றி கொடுத்து நூதன திருட்டில் ஈடுபட்டவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து ரூ.85 ஆயிரம் மீட்கப்பட்டது.

போலி ஏ.டி.எம். கார்டுகள்

சமீப காலமாக திருத்தணி மா.பொ.சி சாலையில் உள்ள ஏ.டி.எம். மையத்தில் தொடர்ச்சியாக நூதன முறையில் பொதுமக்களை ஏமாற்றி பணம் திருடப்பட்டு வருவதாக அடிக்கடி புகார்கள் எழுந்த வண்ணம் இருந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் வாலிபர் ஒருவர் நீண்ட நேரமாக மா.பொ.சி சாலையில் உள்ள ஏ.டி.எம். மையத்திற்குள் நின்று கொண்டிருந்துள்ளார். சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த அவரை கண்காணிப்பு கேமராவில் பார்த்த வங்கியின் மேலாளர் உடனடியாக திருத்தணி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.

விரைந்து வந்த திருத்தணி குற்றப்பிரிவு போலீசார் ஏ.டி.எம். மையத்திற்குள் நின்று கொண்டிருந்த வாலிபரை பிடித்து, சோதனை செய்தபோது அவரிடம் 10-க்கும் மேற்பட்ட போலி ஏ.டி.எம். கார்டுகள் இருந்தது தெரியவந்தது.

வாலிபர் கைது

பின்னர் அவரை கைது செய்த போலீசார் திருத்தணி போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். இதில் கைது செய்யப்பட்ட நபர் ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த தக்கோலம் பகுதியைச் சேர்ந்த ஏழுமலை (வயது 25) என்பதும், இவர் ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுக்க தெரியாமல் இருக்கும் பொதுமக்களிடம் பணம் எடுத்து தருவதாக கூறி அவர்களிடம் இருந்து ஏ.டி.எம். கார்டை பெற்றுக்கொண்டு, போலியான ஏ.டி.எம். கார்டை அவர்களிடம் கொடுத்து விடுவதும், பின்னர் ஏ.டி.எம். கார்டு உரிமையாளர் சென்ற பிறகு பணத்தை திருடிச்செல்வதை வழக்கமாக வைத்திருந்தது தெரியவந்தது. மேலும் 3 பேரிடம் ஏ.டி.எம். கார்டை மாற்றி கொடுத்து ரூ.85 ஆயிரம் திருடிய பணத்தை போலீசார் மீட்டனர். பின்னர் நூதன திருட்டில் ஈடுபட்ட ஏழுமலையை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்