காஞ்சிபுரம்
காஞ்சீபுரம் அருகே ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி - ரூ.7 லட்சம் தப்பியது; மர்மகும்பலுக்கு வலைவீச்சு
|காஞ்சீபுரம் அருகே தனியார் நிறுவனத்தின் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து மர்மநபர்கள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட நிலையில், ஆள்நடமாட்டத்தை கண்டு தப்பியோடியதால் அதில் இருந்த ரூ.7 லட்சம் தப்பியது.
காஞ்சீபுரம் அருகே பாலுச்செட்டிசத்திரம் பஜாரில் ஒரு தனியார் நிறுவனமான இண்டிகேஷ் என்ற ஏ.டி.எம். மையமானது செயல்படுகிறது.
இந்த ஏ.டி.எம். மையத்திற்குள் நேற்று முன்தினம் இரவு உள்ளே புகுந்த மர்மநபர்கள் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து அதிலிருந்த பணத்தை கொள்ளையடிக்க முயன்றனர். அப்போது அப்பகுதியில் ஆள் நடமாட்டம் இருந்ததை கண்டு மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். பின்னர் இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பாலுச்செட்டி சத்திரம் போலீசார், கைரேகை தடயவியல் நிபுணர்களை வரவழைத்து தடயங்களை சேகரித்தனர்.
காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் எம்.சுதாகர் நேரில் சென்று ஏ.டி.எம். மையத்தினை பார்வையிட்டு ஆய்வு செய்தார். கொள்ளை முயற்சி நடந்த ஏ.டி.எம். மைத்திலுள்ள ஏ.டி.எம். எந்திரத்தில் நேற்று மாலையே பணமானது வைக்கப்பட்ட நிலையில் ரூ.7 லட்ச ரூபாய் ரொக்க பணமானது தப்பியிருப்பது தெரியவந்திருக்கிறது. குற்றவாளிகளை கண்டுபிடிக்க காஞ்சீபுரத்தில் இருந்து டைகர் என்ற மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. மோப்ப நாய் அந்த ஏ.டி.எம். மையத்திற்குள் சென்று அங்கிருந்து மோப்பம் பிடித்து சுமார் 3 கி.மீ தூரம் சென்று நின்றது. யாரையும் கல்வி பிடிக்கவில்லை.
மேலும் இது குறித்து பாலுச்செட்டி சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கே.வி.பாலமுருகன் வழக்குப்பதிவு செய்து ஏ.டி.எம். மையத்திலுள்ள கண்காணிப்பு கேமரா மற்றும் அப்பகுதியிலுள்ள கேமரா காட்சிகளை ஆய்வு செய்து, ஏ.டி.எம். மையத்தில் கொள்ளையடிக்க சதி திட்டம் தீட்டி கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். காஞ்சீபுரம் அருகே தனியார் நிறுவனத்தின் ஏ.டி.எம். மையத்தில் கொள்ளை முயற்சி நடைபெற்றுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.