சென்னை
வடபழனி முருகன் கோவிலில் இன்று ஆடிக்கிருத்திகை விழா
|ஆடிக்கிருத்திகையையொட்டி வடபழனி முருகன் கோவில் உள்பட சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள அனைத்து முருகன் கோவில்களிலும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
சென்னை,
முருகப்பெருமான் வழிபாட்டுக்கு உகந்த நாளான ஆடிக்கிருத்திகை இன்று (புதன்கிழமை) கொண்டாடப்படுகிறது. இந்த கிருத்திகையில் விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபடுவது சகல நன்மையும் பெற்று தரும் என்பது ஐதீகமாக பார்க்கப்படுகிறது. இந்த நாளில் பக்தர்கள் பால்குடம், நாவில் அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்துவார்கள்.
ஆடிக்கிருத்திகையையொட்டி சென்னையில் உள்ள முருகன் கோவில்களில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. வடபழனி முருகன் கோவிலில் ஆடி கிருத்திகை சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. அதன்படி, ஆடிக்கிருத்திகையான இன்று (புதன்கிழமை) அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. அதனைத்தொடர்ந்து, பள்ளியெழுச்சி பூஜைகள், அபிஷேகம், சந்தனகாப்பு அலங்காரம் நடக்கிறது.
உச்சிகால பூஜை முடிந்ததும் ராஜ அலங்காரமும் நடக்கிறது. அதிகாலை, 5 மணி முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர்கள். மாலையில் அபிஷேகம் முடிந்ததும், புஷ்ப அங்கி அலங்காரம் நடக்கிறது. இரவு வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர் மாட வீதி புறப்பாடு நடக்கிறது.
மேலும், பக்தர்கள் நெரிசல் இன்றி இறைவனை தரிசனம் செய்யும் வகையில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. கோவில் வளாகத்தில் 4 முனை சந்திப்பில் டிக்கெட் வழங்கும் அறைகள் அமைக்கப்பட்டுள்ளது. மேற்கு, தெற்கு வாசல் வழியாக கோவிலுக்குள் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.
முதியோர், கர்ப்பிணி பெண்கள், கைக்குழந்தையுடன் வருவோர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு மேற்கு நுழைவாயிலில் சிறப்பு பாதை அமைக்கப்பட்டுள்ளது. நேர்த்திக்கடன் செலுத்த வரும் பக்தர்களும் மேற்கு கோபுர வாசல் வழியாக உள்ளே அனுமதிக்கப்படுவார்கள். முடி காணிக்கை செலுத்தும் பக்தர்களின் வசதிக்காக, வள்ளி மண்டபம் அடுத்த பசு மடத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
3 இடங்களில் குடிநீர் பந்தல் அமைக்கப்பட உள்ளது. தரிசன டிக்கெட் வழங்கும் இடங்களில் இருந்து உள்ளே நுழையும் வரை பந்தல், தரை விரிப்பு வசதியுடன் வரிசை அமைக்கப்படுகிறது. தற்காலிக கழிப்பறைகள் தெற்கு பகுதியில் அமைக்கப்படுகிறது. இருசக்கர வாகனங்கள் கோவில் நுழைவாயில் வளைவின் வலதுபுறம் உள்ள பாலம் அடியில் நிறுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
கந்தகோட்டம் முருகன் கோவில், திருப்போரூர் கந்தசாமி கோவில், பெசன்ட்நகர் அறுபடை முருகன் கோவில், வல்லக்கோட்டை சுப்பிரமணியர் முருகன் கோவில், குன்றத்தூர் முருகன் கோவில், சிறுவாபுரி முருகன் கோவில் உள்பட சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள முருகன் கோவில்களிலும் ஆடிக்கிருத்திகையையொட்டி சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
திருத்தணி உள்பட முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளிலும், தமிழகம் முழுவதிலும் உள்ள முருகன் கோவில்களிலும் இன்று ஆடிக்கிருத்திகை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.