பெரம்பலூர்
பள்ளி மாணவர்களுக்கான தடகள போட்டிகள்
|பள்ளி மாணவர்களுக்கான தடகள போட்டிகள் நடந்தன.
தடகள போட்டிகள்
பெரம்பலூர் மாவட்ட பள்ளி கல்வித்துறை சார்பாக குடியரசு தின விழாவை முன்னிட்டு பெரம்பலூர் குறுவட்ட அளவில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கான விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன. நேற்று 14, 17, 19 வயதிற்கு உட்பட்ட மாணவர்களுக்கான தடகள விளையாட்டு போட்டிகள் பெரம்பலூர் மாவட்ட எம்.ஜி.ஆர். விளையாட்டு அரங்கில் நடந்தது.
இதில் ஓட்டப்பந்தயம், தொடர் ஓட்டம், தடை தாண்டும் ஓட்டம், மும்முறை தாண்டுதல் ஓட்டம், தட்டு எறிதல், குண்டு எறிதல், ஈட்டி எறிதல், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், கோலூன்றி தாண்டுதல் உள்ளிட்ட போட்டிகள் நடந்தன. இதில் பெரம்பலூர், வேப்பந்தட்டை ஒன்றியங்களை சேர்ந்த பள்ளிகளில் இருந்து 800-க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு, தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.
பதக்கம்
போட்டியில் முதல் 3 இடங்களை பிடித்த வீரர்களுக்கு பதக்கமும், சான்றிதழும் வழங்கப்பட்டது. முதல் 2 இடங்களை பிடித்த வீரர்கள் மாவட்ட அளவிலான போட்டிகளில் விளையாடவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. பெரம்பலூர், குன்னம் குறுவட்ட அளவில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கான விளையாட்டு போட்டிகள் நேற்றுடன் முடிவடைந்தது. பெரம்பலூர் மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் அடுத்த மாதம் (அக்டோபர்) நடத்தப்படவுள்ளது.