பெரம்பலூர்
மாவட்ட இளையோர்களுக்கான தடகள போட்டிகள்
|மாவட்ட இளையோர்களுக்கான தடகள போட்டிகள் நடைபெற்றது.
பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த இளையோர்களுக்கான மாவட்ட அளவிலான தடகள விளையாட்டு போட்டிகள் நேற்று நடந்தது. பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடந்த இந்த தடகள போட்டியை நகராட்சி துணைத் தலைவர் ஹரிபாஸ்கர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். 12, 14, 16, 18, 20 ஆகிய வயதுகளுக்கு உட்பட்ட பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு தனித்தனியாக போட்டிகள் நடத்தப்பட்டன. ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், பந்து எறிதல், வட்டு எறிதல், குண்டு எறிதல், தடை தாண்டும் ஓட்டம், தொடர் ஓட்டம், மும்முறை தாண்டுதல் ஆகிய தடகள விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் மாவட்டத்தில் இருந்து 600-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் போட்டிகளில் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். மாலையில் நடந்த பரிசளிப்பு விழாவில் மாவட்ட பள்ளி உடற்கல்வி ஆய்வாளர் ராஜேந்திரன் போட்டிகளில் முதல் 3 இடங்களை பிடித்த வீரர்-வீராங்கனைகளுக்கு பதக்கம், சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார். அவர்கள் திருவண்ணாமலையில் வருகிற 16-ந் தேதி முதல் 19-ந் தேதி வரை நடைபெறவுள்ள மாநில அளவிலான தடகள விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. போட்டிற்கான ஏற்பாடுகளை பெரம்பலூர் மாவட்ட தடகள சங்கத்தினர் செய்திருந்தனர்.