பெரம்பலூர்
பொறியியல் கல்லூரிகளுக்கு இடையேயான தடகள போட்டிகள்
|பொறியியல் கல்லூரிகளுக்கு இடையேயான தடகள போட்டிகள் நடந்தன.
அண்ணா பல்கலைக்கழக 14-வது மண்டல அளவிலான பொறியியல் கல்லூரிகளுக்கு இடையேயான தடகள விளையாட்டு போட்டிகள் பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரி மைதானத்தில் நேற்று தொடங்கியது. போட்டியை தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக வேந்தர் சீனிவாசன் தொடங்கி வைத்தார். தனலட்சுமி சீனிவாசன் கல்வி குழுமத்தின் செயலாளர் நீல்ராஜ் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மதியழகன், கவுரவ விருந்தினராக மாவட்ட விளையாட்டு அலுவலர் சுரேஷ்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதில் பொறியியல் கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு தனித்தனியாக தடகள போட்டிகள் நடத்தப்பட்டன. ஓட்டப்பந்தயம், தொடர் ஓட்டம், மும்முறை தாண்டுதல், தடை தாண்டும் ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், ஈட்டி எறிதல், வட்டு எறிதல் உள்ளிட்ட தடகள விளையாட்டு போட்டிகள் நடந்தன. இதில் பெரம்பலூர், அரியலூர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் உள்ள 19 பொறியியல் கல்லூரிகளை சேர்ந்த வீரர்-வீராங்கனைகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். மீதமுள்ள தடகள விளையாட்டு போட்டிகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. போட்டிகளில் முதல் 3 இடங்களை பிடித்த வீரர்-வீராங்கனைகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளது. முதல் 2 இடங்களை பிடித்த வீரர்-வீராங்கனைகள் வருகிற 17, 18-ந் தேதிகளில் தொட்டியத்தில் நடைபெறும் மண்டலங்களுக்கு இடையேயான தடகள விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்ள உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.