விழுப்புரம்
மாவட்ட அளவிலான தடகள போட்டிகள் 13-ந் தேதி நடக்கிறது
|மாவட்ட அளவிலான தடகள போட்டிகள் 13-ந் தேதி நடக்கிறது.
விழுப்புரம் மாவட்ட அளவிலான தடகள போட்டிகள் வருகிற 13-ந் தேதி (வியாழக்கிழமை) காலை 7 மணியளவில் விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி அருகில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடைபெற உள்ளது. இப்போட்டிகள் ஆண்கள், பெண்கள் இருபாலருக்கும் தனித்தனியாக நடைபெறுகிறது. 14, 16, 18, 20 ஆகிய வயதுக்குட்பட்டவர்களுக்கு 60 மீ, 100 மீ, 200 மீ, 300 மீ, 400 மீ, 600 மீ, 800 மீ, 1,500 மீ, 2,000 மீ, 3,000 மீ, 5,000 மீட்டர் ஓட்டம், தடை தாண்டும் ஓட்டம், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், உயரம் தாண்டுதல், வட்டு எறிதல், ஈட்டி எறிதல் போன்ற அனைத்து தடகள போட்டிகளும் தனித்தனியாக நடைபெறும். இப்போட்டிகளில் வெற்றி பெறும் முதல் 2 இடங்களை பிடிப்பவர்கள் மாநில அளவிலான போட்டிகளில் கலந்துகொள்ளலாம்.
மாநில தடகள போட்டிகள் வருகிற 16-ந் தேதி முதல் 19-ந் தேதி வரை திருவண்ணாமலையில் நடைபெற உள்ளது. இப்போட்டிகளில் கலந்துகொள்ள நுழைவு கட்டணமாக பள்ளி மாணவ- மாணவிகளுக்கு ரூ.50-ம், பொதுப்பிரிவினருக்கு ரூ.100-ம் கட்டணம் செலுத்த வேண்டும். போட்டியில் கலந்துகொள்ள விருப்பம் உள்ளவர்கள் தங்களது ஆதார் அட்டை ஜெராக்ஸ் நகலுடன் நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் 13-ந் தேதி காலை 7 மணி வரை மாவட்ட விளையாட்டு அரங்கில் தங்கள் பெயர்களை பதிவு செய்துகொள்ளலாம்.
போட்டிகளில் கலந்துகொள்பவர்கள் விளையாட்டு சீருடையுடன் கலந்துகொள்ள வேண்டும். மேலும் தொடர்புக்கு மாவட்ட தடகள சங்க செயலாளரை 94434 81718, 70100 16182 ஆகிய செல்போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம். இந்த தகவல் கலெக்டர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.