தர்மபுரி
தர்மபுரியில் தடகள போட்டிகள்
|தர்மபுரியில் பள்ளி கல்வித்துறை சார்பில் நடைபெற்ற மாவட்ட அளவிலான தடகள போட்டிகளில் 865 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். இந்த போட்டியை முதன்மை கல்வி அலுவலர் குணசேகரன் தொடங்கி வைத்தார்.
தர்மபுரி:
தர்மபுரியில் பள்ளி கல்வித்துறை சார்பில் நடைபெற்ற மாவட்ட அளவிலான தடகள போட்டிகளில் 865 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். இந்த போட்டியை முதன்மை கல்வி அலுவலர் குணசேகரன் தொடங்கி வைத்தார்.
தடகள போட்டிகள்
தர்மபுரி மாவட்ட பள்ளி கல்வித்துறை சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட அளவிலான தடகள போட்டிகள் தர்மபுரியில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கில் நேற்று தொடங்கியது. இந்த போட்டிகளை முதன்மை கல்வி அலுவலர் குணசேகரன் ஒலிம்பிக் சுடர் ஏற்றி வைத்து தொடங்கி வைத்தார். பின்னர் அவர் சரக அளவில் போட்டியிடும் மாணவ, மாணவிகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் மான்விழி, மாவட்ட விளையாட்டு அலுவலர் சாந்தி, செல்வ மாளிகை நிர்வாகி மணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் முத்துக்குமார் வரவேற்று பேசினார். விழாவில் மாநில அளவில் பல்வேறு போட்டிகளில் சிறப்பிடம் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. மேலும் ஓய்வு பெறும் உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் சிறப்பாக பணி புரியும் உடற்கல்வி ஆசிரியர்களுக்கு பொன்னாடை அணிவித்து கவுரவிக்கப்பட்டது. இதில் பள்ளி தலைமை ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குனர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். முடிவில் உடற்கல்வி இயக்குனர் நேதாஜி நன்றி கூறினார்.
865 மாணவ மாணவிகள்
வருவாய் மாவட்ட அளவில் ஓட்டம், தடை தாண்டி ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், வட்டு எறிதல், ஈட்டி எறிதல், குண்டு எறிதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. இதில் சரக அளவில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த 865 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து 2-வது நாளாக இன்று (வெள்ளிக்கிழமை) தடகளப் போட்டிகள் நடைபெறுகிறது. இந்த போட்டிகளில் வெற்றி பெறும் மாணவ, மாணவிகளுக்கு இன்று (வெள்ளிக்கிழமை) பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கும் விழா நடக்கிறது. பல்வேறு பிரிவுகளில் மாவட்ட அளவில் முதலிடம் பிடிக்கும் மாணவ, மாணவிகள் மாநில அளவிலான போட்டிக்கு தேர்வு செய்யப்படுகிறார்கள்.