ஈரோடு
அத்திக்கடவு-அவினாசி திட்ட சோதனை ஓட்டம் விரைவில் தொடங்கப்படும்; அமைச்சர் சு.முத்துசாமி தகவல்
|அத்திக்கடவு-அவினாசி திட்ட சோதனை ஓட்டம் விரைவில் தொடங்கப்படும் என்று அமைச்சர் சு.முத்துசாமி கூறியுள்ளாா்.
அத்திக்கடவு-அவினாசி திட்டப்பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக வளாக கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் தமிழக வீட்டுவசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி கலந்துகொண்டு திட்ட பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். அதன்பிறகு அவர் பேசும்போது கூறியதாவது:-
இந்த திட்டத்தில் பெரும்பாலான பணிகள் நிறைவடைந்து உள்ளது. மின் கம்பங்கள் அமைக்கும் பணி, நிலத்துக்கு அடியில் மின்சார தொடரமைப்புகள் பதிக்கும் பணி வேகமாக நடந்து வருகிறது. மொத்த நீளம் 63.15 கிலோ மீட்டர் தொலைவில் 61.35 கிலோ மீட்டர் தொலைவிலான பணிகள் முடிக்கப்பட்டு உள்ளன. குளம், குட்டைகளை இணைக்கும் பணிகள் நடந்து வருகிறது. அதில் 1,045 நீர்நிலைகளில் 1,036 நீர்நிலைகளுக்கு இணைப்பு கொடுக்கப்பட்டு விட்டன. கொரோனா தொற்று காரணமாக 2020-2021 ஆண்டுகளில் பணிகளில் தாமதம் ஏற்பட்டது. தற்போது பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதுவரை ரூ.1,603 கோடியே 66 லட்சம் செலவில் பணிகள் நடந்து உள்ளன. விரைவில் சோதனை ஓட்டம் தொடங்கப்பட உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி சந்தோஷினி சந்திரா, செயற்பொறியாளர் எஸ்.மன்மதன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.