தேனி
வீரபாண்டி கவுமாரியம்மன் கோவிலில்கழிப்பறைகளை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்:இந்து முன்னணியினர் மனு
|வீரபாண்டி கவுமாரியம்மன் கோவிலில் கழிப்பறைகளை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று இந்து முன்னணியினர் மனு கொடுத்தனர்.
தேனி அருகே வீரபாண்டியில் பிரசித்தி பெற்ற கவுமாரியம்மன் மற்றும் கண்ணீஸ்வரமுடையார் கோவில்கள் உள்ளன. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின்கீழ் உள்ள இந்த கோவில்களுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர். இந்த நிலையில் தேனி ஒன்றிய இந்து முன்னணி செயலாளர் சின்னராஜ் தலைமையில் இந்து முன்னணியினர் கோவிலுக்கு வந்தனர். அவர்கள் கோவில் அலுவலகத்தில் அதிகாரியிடம் மனு ஒன்றை கொடுத்தனர். அதில், கோவிலுக்கு வரும் பக்தர்கள் முல்லைப்பெரியாற்றில் நீராடுவது வழக்கம். அந்த ஆற்றின் கரையை சிலர் திறந்தவெளி கழிப்பறையாக பயன்படுத்துகின்றனர். இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே பக்தர்களுக்கு கட்டப்பட்டுள்ள இலவச கழிப்பறைகளை திறந்து பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும். மேலும் கண்ணீஸ்வரமுடையார் கோவிலில் கும்பம் இல்லாமல் இருந்து வருகிறது. இதனை சரி செய்ய வேண்டும் என்று கூறியிருந்தனர்.