ஈரோடு
பல்வேறு இடங்களில்பொங்கல் விழா கொண்டாட்டம்
|பல்வேறு இடங்களில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
பல்வேறு இடங்களில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
அந்தியூர்
அந்தியூர் பேரூராட்சி பகுதியில் தி.மு.க. சார்பில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி தி.மு.க.வினர் பொங்கல் வைத்தனர்.
விழாவில் அந்தியூர் ஏ.ஜி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு கட்சி கொடியை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு பொங்கல் வழங்கி வாழ்த்துகள் தெரிவித்து கொண்டார்.
இதில் கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
கோபி மழலையர் பள்ளி
இதேபோல் கோபி ல.கள்ளிப்பட்டி அய்யப்பா நகரில் உள்ள திகிரையான்ஸ் ப்ரி எஜூகேர் மழலையர் பள்ளியில் மழலைகளுடன் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
தொடர்ந்து குழந்தைகளுக்கு பாரம்பரிய விளையாட்டுகளான உறி அடித்தல், சிலம்பாட்டம், கும்மிப்பாட்டு ஆகியவை நடத்தப்பட்டது. பொங்கல் வைக்கும் போது அனைவரும் பொங்கலோ பொங்கல் என்று உற்சாகமாக கூறினார்கள்.
விழாவில் சாய் கிரிஷ் குடும்பத்தின் தலைவர் செல்லதுரை, 11-வது வார்டு கவுன்சிலர் முத்துராமணன், மணி மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டார்கள். பின்னர் அனைவருக்கும் பொங்கல் வழங்கப்பட்டது.
பெருந்துறை ஒன்றிய தே.மு.தி.க.
பெருந்துறை ஒன்றிய தே.மு.தி.க. சார்பில் சமத்துவ பொங்கல் விழா திங்களூர் நிச்சாம்பாளையம், அண்ணா நகர் ஆகிய பகுதிகளில் நடந்தது. இந்த விழாவுக்கு கட்சியின் ஒன்றிய செயலாளர் வெங்கடாஜலபதி தலைமை தாங்கினார். ஈரோடு தெற்கு மாவட்ட பொறுப்பாளர் பொன் மனோகர் முன்னிலை வகித்தார். விழாவில் கலந்து கொண்ட தூய்மை பணியாளர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்பட்டது. இதையொட்டி அந்த பகுதியில் கட்சி கொடி ஏற்றப்பட்டது.
இதில் ஈரோடு தெற்கு மாவட்ட பொருளாளர் செல்வகுமார், பெருந்துறை ஒன்றிய துணைச்செயலாளர் ராஜமாணிக்கம், ஒன்றிய பிரதிநிதிகள் தமிழரசு, மகேந்திரன், செல்வராசு, தமிழ் உள்பட பலா் கலந்து கொண்டனர். விழாவுக்கான ஏற்பாடுகளை, பெருந்துறை ஒன்றிய தே.மு.தி.க. நிர்வாகிகள் செய்திருந்தனர்.
ஒட்டபாளையம்
அந்தியூர் அருகே உள்ள ஒட்டபாளையம் ஊராட்சியில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. விழாவிற்கு ஒட்டபாளையம் ஊராட்சி தலைவர் சி.ஆர்.பெருமாள்சாமி தலைமை தாங்கினார். பொதுமக்கள் மற்றும் வார்டு உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டு சமத்துவ பொங்கல் வைத்தனர். தொடர்ந்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விளையாட்டு போட்டிகள், கட்டுரை போட்டி, பெண்களுக்கு கோல போட்டி ஆகியவை நடத்தப்பட்டது.
வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. ஊராட்சி துணைத்தலைவர் பழனியம்மாள், மக்கள் நல பணிதல பொறுப்பாளர்கள் சத்தியா, சிவகாமி, வார்டு உறுப்பினர்கள் முனுசாமி, மாரியம்மாள், மாரியப்பன், முத்துசாமி, அங்கம்மாள், சபீனா, கணேசன், சரசு. மகளிர் குழுவினர் ரத்தினா, விஜயா, ஊராட்சி செயலர் குருசாமி உள்பட ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். அனைவருக்கும் சர்க்கரை பொங்கல், கரும்பு வழங்கப்பட்டது.
வெள்ளாளபாளையம்
அந்தியூர் ஊராட்சி ஒன்றியம் வெள்ளாளபாளையம் ரேஷன் கடையில் பொங்கல் பொருட்கள் வழங்கப்பட்டது. அந்தியூர் ஒன்றிய நெசவாளர் அணி அமைப்பாளர் முருகன் குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி, சர்க்கரை, கரும்பு மற்றும் ரூ.1000 வழங்கப்பட்டது. அப்போது கூட்டுறவு சங்க அதிகாரிகள், உறுப்பினர்கள் உடன் இருந்தனர்.
புஞ்சைபுளியம்பட்டி நகராட்சி அலுவலகத்தில் நகராட்சி தலைவர் ஜனார்த்தனன் தலைமையில் சமத்துவ பொங்கல் வைக்கப்பட்டது. இதில் துணைத்தலைவர் பி.ஏ.சிதம்பரம், கவுன்சிலர்கள், நகராட்சி அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
மொடச்சூர் உழவர் சந்தை
கோபி அருகே உள்ள மொடச்சூர் உழவர் சந்தையில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு உழவர் சந்தை நிர்வாக அலுவலர் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். உதவி நிர்வாக அலுவலர் பிரியங்கா அனைவரையும் வரவேற்று பேசினார். விழாவில் ஈரோடு வேளாண்மை துணை இயக்குனர் மகாதேவன் (வேளாண் வணிகம்) சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இதையொட்டி உழவர் சந்தையில் பொங்கல் வைக்கப்பட்டது.
இதில் விவசாயிகளான ஈஸ்வரன், தர்மலிங்கம், சோமசுந்தரம், மற்றும் லட்சுமணன், மூர்த்தி மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
பொங்கல் நாள் அன்று கோபி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து 10 ஆயிரத்து 138 கிலோ காய்கறிகள் கொண்டு வரப்பட்டன. மொத்தம் ரூ.3 லட்சத்து 3 ஆயிரத்து 711-க்கு காய்கறிகள் விற்பனை ஆனது.