< Back
மாநில செய்திகள்
பல்வேறு இடங்களில்  விநாயகர் சிலைகள் ஊர்வலம்
ஈரோடு
மாநில செய்திகள்

பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் ஊர்வலம்

தினத்தந்தி
|
2 Sept 2022 9:58 PM IST

ஊர்வலம்

பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடந்தது.

சத்தியமங்கலம்

சத்தியமங்கலம் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து நேற்று விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடந்தது. இதையொட்டி பல்வேறு இடங்களில் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் டிராக்டர், வேன், ஆட்டோ போன்ற 40 வாகனங்களில் மலர்களாலும், மின் விளக்குகளாலும் அலங்கரித்து ஏற்றப்பட்டன. பின்னர் வாகனங்கள் கோவை ரோட்டில் உள்ள எஸ்.ஆர்.டி. கார்னருக்கு வந்தது. அதன்பின்னர் அங்கிருந்து மாலை 4.30 மணி அளவில் ஊர்வலம் புறப்பட்டது.

ஊர்வலம் ரங்கசமுத்திரம், புதுப்பாலம், சின்ன வீதி, கோட்டுவீராம்பாளையம், சின்ன பள்ளி வாசல், கடைவீதி, பெரிய பள்ளிவாசல், வன்னியர் வீதி, திப்பு சுல்தான் ரோடு வழியாக வடக்குப்பேட்டையை வந்தடைந்தது. அங்குள்ள மேடையில் இந்து முன்னணி மாநில பேச்சாளர் சிங்கை பிரபாகரன் பேசினார். அதன் பிறகு மீண்டும் ஊர்வலம் புறப்பட்டது. பவானி ஆற்றுக்கு கொண்டு செல்லப்பட்டு விநாயகர் சிலைகள் இரவு கரைக்கப்பட்டது. இந்த ஊர்வலத்தை முன்னிட்டு ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் தலைமையில் கூடுதல் காவல் அதிகாரி ஜானகிராமன், சத்தியமங்கலம் துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரசேகர் ஆகியோர் மற்றும் தமிழ்நாடு சிறப்பு அதிரடிப்படையினரும் என 525 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டார்கள். சின்ன பள்ளி வாசல் மற்றும் பெரிய பள்ளிவாசல் அருகே அதிக எண்ணிக்கையில் போலீசார் குவிக்கப்பட்டு இருந்தார்கள். அங்கு கூட்டத்தை கலைக்கும் தண்ணீர் பீச்சியடிக்கும் வஜ்ரா வாகனம் நிறுத்தப்பட்டு இருந்தது.

கொடுமுடி

இதேபோல் கொடுமுடி சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து 20 விநாயகர் சிலைகள் வாகனங்களில் ஏற்றப்பட்டு ஊர்வலமாக கொடுமுடி பஸ் நிலையம் கொண்டு வரப்பட்டன. பின்னர் அங்கிருந்து ஊர்வலம் தொடங்கியது. அதன்பின்னர் அங்கிருந்து ஊர்வலமாக மகுடேஸ்வரர் கோவிலுக்கு முன்பு உள்ள காவிரி ஆற்று படித்துறைக்கு கொண்டு செல்லப்பட்டன. அதைத்தொடர்ந்து காவிரி ஆற்றில் கரைக்கப்பட்டன. இதையொட்டி போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு் இருந்தது. இந்த ஊர்வலத்தில் மொத்தம் 20 சிலைகள் கொண்டுவரப்பட்டு கரைக்கப்பட்டது.

அறச்சலூர்

அறச்சலூரில் இந்து முன்னணியின் சார்பில் 27 இடங்களில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் மாலை வடபழனியில் இருந்து விநாயகர் சிலைகள் வாகனங்களில் ஏற்றப்பட்டு பல்வேறு இடங்கள் வழியாக கொடுமுடி கைகாட்டி பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டன. பின்னர் அங்கு விநாயகர் சிலைகளுக்கு பூஜை நடத்தப்பட்டன.

அதன்பின்னர் அங்கிருந்து ஊர்வலத்தை மொடக்குறிச்சி ஒன்றிய பா.ஜ.க. தலைவர் கோபிநாத் சின்னசாமி தலைமையில் சி.கே.சரஸ்வதி எம்.எல்.ஏ., மாநில விவசாய அணி துணைத்தலைவர் டி.தங்கராஜ் ஆகியோர் வாகனங்களை கொடி அசைத்து தொடங்கி வைத்தனர். அதனை தொடர்ந்து அருகில் உள்ள கீழ்பவானி பாசன வாய்க்காலில் அனைத்து சிலைகளும் கரைக்கப்பட்டது.

அந்தியூர்

அந்தியூரில் விநாயகர் சதுர்த்தி அன்று அந்தியூர் மற்றும் வெள்ளித்திருப்பூர் பகுதியில் இந்து முன்னணி மற்றும் பொதுமக்கள் சார்பில் 25-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு 3 நாட்கள் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. அவற்றை தொடர்ந்து நேற்று மாலை 3 மணி அளவில் அனைத்து சிலைகளும் சரக்கு ஆட்டோ, டிராக்டர்களில் ஏற்றப்பட்டு சந்தியபாளையம் பிரிவுக்கு கொண்டுவரப்பட்டன. பின்னர் அங்கிருந்து ஊர்வலம் தொடங்கியது. அந்தியூர் தவிட்டுப்பாளையத்தில் உள்ள முக்கிய வீதிகள் வழியாக மேளதாளங்கள் முழங்க பக்தர்கள் ஆடி பாடி கொண்டு ஊர்வலமாக அத்தாணி பவானி ஆற்றுக்கு சென்றனர். பின்னர் ஆற்றில் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டது. இதையொட்டி பவானி துணை போலீஸ் சூப்பிரண்டு அமிர்தவர்ஷினி தலைமையில் அந்தியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் முன்னிலையில் 250-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

சென்னிமலை

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சென்னிமலையில் இந்து முன்னணி சார்பில் 1010 காலனி, பஸ் நிலையம் மைலாடி, வெப்பிலி, திருமலை நகர் ஆகிய இடங்களில் விநாயகர் சிலை வைக்கப்பட்டது. பின்னர் நேற்று மாலை சென்னிமலை பஸ் நிலையத்தில் இருந்து ஊர்வலம் புறப்பட்டது.

முகாசிப்பிடாரியூர் ஊராட்சி தலைவர் கேபிள் நாகராஜ், சென்கோப்டெக்ஸ் முன்னாள் மேலாளர் பழனிவேல் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ஊர்வலத்தை தொடங்கி வைத்தனர். ரத வீதிகள் வழியாக ஊர்வலம் சென்று சிலைகள் நொய்யல் ஆற்றில் கரைக்கப்பட்டன. இந்த நிகழ்ச்சிக்கு இந்து முன்னணி ஒன்றிய தலைவர் குமாரசாமி தலைமை தாங்கினார். இந்நிகழ்ச்சியில் பா.ஜ.க. ஒன்றிய தலைவர் சந்திரசேகர், பொதுச் செயலாளர் சுந்தர்ராசு, துணை தலைவர்கள் தமிழரசன் மதன்குமார் செயலாளர் கோபிநாத், சென்னிமலை ஒன்றிய இந்து முன்னணி நிர்வாகிகள், திருப்பூர் மாவட்ட இந்து முன்னணி தலைவர் அண்ணாதுரை உள்பட பல்வேறு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கவுந்தப்பாடி

கவுந்தப்பாடியில் இந்து மக்கள் கட்சி சார்பில் 16 இடங்களில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. தொடர்ந்து மாலை 5 மணி அளவில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் இந்து மக்கள் கட்சி மாநில செயலாளர் க.சி.முருகேசன் தலைமையில் மாநில அமைப்பு செயலாளர் பூபாலு முன்னிலையில் கவுந்தப்பாடியில் இருந்து தொடங்கியது. முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலம் பெருந்தலையூர் பவானி ஆற்றுக்கு சென்றது. பின்னர் ஆற்றில் சிலைகள் கரைக்கப்பட்டன.

மேலும் செய்திகள்