< Back
மாநில செய்திகள்
வடுவூரில், ரூ.7 கோடியில் உள் விளையாட்டு அரங்கம்
திருவாரூர்
மாநில செய்திகள்

வடுவூரில், ரூ.7 கோடியில் உள் விளையாட்டு அரங்கம்

தினத்தந்தி
|
15 March 2023 12:17 AM IST

வடுவூரில், ரூ.7 கோடியில் கட்டப்பட்டுள்ள உள் விளையாட்டு அரங்கை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.


வடுவூரில், ரூ.7 கோடியில் கட்டப்பட்டுள்ள உள் விளையாட்டு அரங்கை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.

உள்விளையாட்டு அரங்கம்

திருவாரூர் மாவட்டம் வடுவூரில் ரூ.7 கோடி மதிப்பில் கட்டப்பட்ட உள்விளையாட்டு அரங்க திறப்பு விழா நேற்று நடந்தது. விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு உள்விளையாட்டு அரங்கை திறந்து வைத்து பேசினார்.

அவர் பேசியதாவது:-

நீச்சல்குளம்

1964-ம் ஆண்டு டோக்கியோவில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் தடகளத்தில் பங்கேற்று இந்தியாவுக்கே பெருமை சேர்த்த ராஜசேகரனுக்கு சிலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். வடுவூர் கிராமத்தில் இதுவரை 300 பேர் விளையாட்டு ஒதுக்கீட்டில் பல்வேறு அரசு பணிகளுக்கு சென்றிருப்பது இந்த ஊரின் பெருமையை உணர்த்துகிறது.

வடுவூர் உள் விளையாட்டு அரங்கத்தில் 200 மீட்டர் ஓடுதளம் மற்றும் 500 மீட்டர் சுற்றுச்சுவர் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். மன்னார்குடி ஆர்பி சிவம் நகரில் நீச்சல் குளம் வரும் நிதியாண்டில் கட்டப்படும். அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் வடுவூர் விளையாட்டு அரங்கம் போன்று அமைத்து தரப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சக்கரபாணி, எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் எம்.பி., பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர். டி.ஆர்.பி. ராஜா எம்.எல்.ஏ. வரவேற்றார். கலெக்டர் சாருஸ்ரீ, விளையாட்டு மைதானம் அமைவதற்கு இடம் வழங்கிய குடும்பத்தை சேர்ந்த கிருஷ்ணன், வடுவூர் விளையாட்டு அகாடமி தலைவர் ராஜராஜேந்திரன், செயலாளர் சாமிநாதன், அறங்காவலர் பந்தல் சிவா, வடுவூர் மேல்நிலைப்பள்ளி தலைவர் நீலமேகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கலைஞர் அருங்காட்சியகம்

விழாவில் பங்கேற்ற பின்னர் வடுவூரில் இருந்து கூத்தாநல்லூர் வழியாக திருவாரூருக்கு வந்தார். விளமல் பகுதியில் தொண்டர்கள் வரவேற்பு அளித்தனர்.

வரவேற்புக்கு பின்னர் சுற்றுலா ஆய்வு மாளிகைக்கு சென்ற அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பின்னர் அங்கிருந்து திருவாரூரை அடுத்த காட்டூரில் உள்ள கலைஞர் அருங்காட்சியகத்தை பார்வையிட்டார். இரவு சுற்றுலா ஆய்வு மாளிகையில் தங்கினார்.

நலத்திட்ட உதவிகள்

இன்று(புதன்கிழமை) காலை திருவாரூரை அடுத்த காட்டூரில் உள்ள அஞ்சுகம் அம்மையார் நினைவிடத்துக்கு செல்கிறார். தொடர்ந்து நாகை மாவட்டம் திருக்குவளைக்கு செல்கிறார்.

தொடர்ந்து காலை 10.30 மணிக்கு திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு 127 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்டம் திருவெண்காட்டிற்கு செல்கிறார்.

மேலும் செய்திகள்