தூத்துக்குடி
திருச்செந்தூர் பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நர்சிங் கல்லூரியில்'ஆராய்ச்சி முறையில் செவிலியர்களின் திறன் வளர்ப்பு' குறித்த மாநில கருத்தரங்கு
|திருச்செந்தூர் பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நர்சிங் கல்லூரியில் ‘ஆராய்ச்சி முறையில் செவிலியர்களின் திறன் வளர்ப்பு' குறித்த மாநில கருத்தரங்கு நடந்தது.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நர்சிங் கல்லூரியில், 'ஆராய்ச்சி முறையில் செவிலியர்களின் திறன் வளர்ப்பு' என்ற தலைப்பில் மாநில அளவிலான கருத்தரங்கு நடந்தது. கல்லூரி முதல்வர் என்.கலைக்குருச்செல்வி வரவேற்று பேசி, தரமான ஆராய்ச்சி வடிவமைப்பு என்ற தலைப்பில் காணொளி காட்சி மூலம் விளக்கி பேசினார். கல்லூரி செயலாளர் நாராயணராஜன், ஆராய்ச்சி செயல்முறை குறித்த அறிமுகம் மற்றும் அதில் செவிலியரின் திறன் வளர்ப்பு பற்றிய சிறப்புரை ஆற்றினார். கல்லூரி செவிலிய துறை இணை பேராசிரியை சுமதி கருத்தரங்கின் மையக்கருத்தை எடுத்துரைத்தார். நாகர்கோவில் செயின்ட சேவியர்ஸ் கத்தோலிக் செவிலியர் கல்லூரி முதல்வர் ரீனா எவின்சி, ஆராய்ச்சி முறைகளில் உள்ள சவால்களையும் அதனை சமாளிப்பதற்கான வழிமுறைகள் குறித்து பேசினார். பெங்களூர் ஹெல்த்கேர் குளோபல் எண்டர்பிரைசஸ் ஆஸ்பத்திரி உயிர் புள்ளியியல் நிபுணர் மணிவேலுசாமி, செவிலியர்கள் ஆராய்ச்சியில் மேம்பட்ட புள்ளி விவரங்கள் என்ற தலைப்பில் பேசினார். மதுரை மீனாட்சி செவிலியர் கல்லூரி பேராசிரியை சிவபிரியா, கலப்பு ஆராய்ச்சி முறைகள் என்ற தலைப்பில் பேசினார். சென்னை சவிதா செவிலியர் கல்லூரி பேராசிரியை மரகதம் ஆராய்ச்சி அறிக்கை எழுதுதல் என்ற தலைப்பில் பேசினார். கேரளா பிஷப் பென்ஸிகர் செவிலியர் கல்லூரி துணை முதல்வர் அன்னாள் ஏஞ்சலின் நடைமுறை வாழ்க்கையில் ஆராய்ச்சி சான்றுகளை பயன்படுத்துதல் என்ற தலைப்பில் காணொளி காட்சி மூலம் விளக்கினார்.
தமிழ்நாடு செவிலியர் மற்றும் மகப்பேறு குழுமத்தின் பார்வையாளராக தூத்துக்குடி புனித அன்னாள் செவிலியர் கல்லூரி துணை பேராசிரியை செல்வி லூர்து கலந்து கொண்டு கருத்தரங்கின் சிறப்பு அம்சங்களை எடுத்துக் கூறினார்.
கருத்தரங்கில் கலந்து கொண்ட அனைவருக்கும் ஆதித்தனார் கல்வி நிறுவன மேலாளர் வெங்கட்ராமராஜ் சான்றிதழ்கள் வழங்கினார். கருத்தரங்கின் அறிக்கையை கல்லூரி இணை பேராசிரியை சங்கீதா வாசித்தார். கல்லூரி துணை பேராசிரியை வனிஷா நன்றி கூறினார். இக்கருத்தரங்கில் மொத்தம் 143 செவிலியர்கள் மற்றும் 320 செவிலிய மாணவிகள் பங்கேற்று பயன்பெற்றனர். இக்கருத்தரங்கை கல்லூரி முதல்வர் தலைமையில் இணை மற்றும் துணை பேராசிரியைகள், ஆசிரியர்கள் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.