தூத்துக்குடி
தூத்துக்குடி பண்ணை பசுமை நுகர்வோர் அங்காடியில் ஒரு கிலோ தக்காளி ரூ.60-க்கு விற்பனை
|தூத்துக்குடி பண்ணை பசுமை நுகர்வோர் அங்காடியில் ஒரு கிலோ தக்காளி ரூ.60-க்கு விற்பனை செய்யப்பட்டது.
தக்காளி
தமிழ்நாட்டில் தக்காளி விலை ஏற்றத்தை கட்டுப்படுத்த கூட்டுறவுத் துறையின் மூலம் செயல்பட்டு வரும் பண்ணை பசுமை நுகர்வோர் கடை மூலம் கொள்முதல் விலைக்கே தக்காளி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு கோடையில் கடும் வெப்பம் நிலவியதால் விவசாயிகள் தக்காளி பயிரிடுவது கணிசமாக குறைந்ததாலும், அண்டை மாநிலங்களிலிருந்து தக்காளி வரத்து குறைந்ததாலும், கடந்த வாரம் முதல் தக்காளி விலை அதிகரித்து உள்ளது. இதனால் வெளிச்சந்தைகளில் ஒரு கிலோ தக்காளியின் விலை ரூ.90 முதல் ரூ.100 வரை விற்கப்படுகிறது. இதனால் ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
ரூ.60-க்கு விற்பனை
இந்த விலையேற்றத்தை கட்டுப்படுத்தும் வகையில், தூத்துக்குடி மாவட்ட கூட்டுறவுத் துறையின் கட்டுப்பாட்டில் செயல்படும், தூத்துக்குடி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தால் நடத்தப்படும் பண்ணை பசுமை நுகர்வோர் அங்காடியில் நேற்று முதல் குறைந்தபட்சமாக தக்காளி விலை கிலோ ஒன்றுக்கு ரூ.60- க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த விலையானது வெளிச்சந்தையுடன் ஒப்பீடுகையில் ரூ.30 முதல் ரூ.40 வரை குறைவானதாகும். இந்த தற்காலிகமான தக்காளி விலையேற்றத்தை கட்டுப்படுத்த அரசு அனைத்து நடவடிக்கைகளையும் துரிதமாக மேற்கொண்டு வருகிறது. எனவே, பொதுமக்கள் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் தக்காளியை வாங்கிப் பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இதற்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி மண்டல இணைப்பதிவாளர் சிவ.முத்துக்குமாரசாமி மற்றும் சரக துணைப்பதிவாளர் ரவீந்திரன் ஆகியோரின் அறிவுரையின்படி, விற்பனைச் சங்கத்தின் செயலாட்சியர் ஜோசில்வஸ்டர், மேலாளர் ராஜதுரை மற்றும் சங்கப்பணியாளர்கள் செய்து உள்ளனர்.