தேனி
கோவில் திருவிழாவில்பக்தர்களிடம் பணம் திருடிய 5 பேர் கைது
|வீரபாண்டி கவுமாரியம்மன் கோவில் திருவிழாவில், பக்தர்களிடம் பணத்தை திருடிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
கோவில் திருவிழா
வீரபாண்டி கவுமாரியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த திருவிழா 8 நாட்கள் நடைபெறுகிறது. இதையொட்டி தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் மற்றும் நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக வருகை தருகின்றனர். இதனால் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. இந்த கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்ம நபர்கள் பக்தர்களிடம் திருட்டு போன்ற சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டிருந்தாலும் திருட்டு சம்பவம் நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து கொண்டிருந்தனர். அப்போது வீரபாண்டி அருகே உள்ள தாடிச்சேரி கிழக்கு தெருவை சேர்ந்த செல்வராஜ் என்பவர் சட்டைப்பையில் இருந்த பணத்தை மர்ம நபர் ஒருவர் திருட முயன்றார். இதையடுத்து அந்த நபரை செல்வராஜ் கையும் களவுமாக பிடித்து வீரபாண்டி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார்.
5 பேர் கைது
போலீசார் விசாரணை நடத்தியதில் அவர் மதுரை திருப்புவனத்தைச் சேர்ந்த மாரியப்பன் (வயது 59) என்பதும், செல்வராஜின் சட்டைப்பையில் இருந்து ரூ.500-யை திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். திண்டுக்கல் ஆத்தூரை சேர்ந்த ராதாகிருஷ்ணன்என்பவரிடம் பணத்தை திருடிய கோம்பை அருகே உள்ள துரைசாமிபுரத்தைச் சேர்ந்த முருகன் (40) என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.
இதேபோல் நேற்றும் திருப்பூர் அருகே உள்ள பிச்சம்பாளையத்தை சேர்ந்த சிவசாமி என்பவரின் சட்டை பையில் இருந்து பணத்தை திருட முயன்ற கம்பம் பூசல்பட்டியை சேர்ந்த அஜித்குமார் (24) என்பவரை கையும், களவுமாக பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் திருடிய பணத்தை அதே பகுதியை சேர்ந்த மற்றொரு அஜித்குமாரிடம் கொடுத்ததாக கூறினார். இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் கேரள மாநிலம் பாம்பாம்பள்ளி ஹவுஸ் பகுதியை சேர்ந்த குமரேசன் என்பவரிடம் திருடிய கம்பத்தை சேர்ந்த நாகராஜ் (29) என்பவரையும் கைது செய்தனர்.