ராமநாதபுரம்
காரங்காடு சுற்றுலா மையத்தில் படகுசவாரி செய்த மக்கள்
|தொடர் விடுமுறையையொட்டி காரங்காடு சுற்றுலா மையத்தில் ஏராளமான சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்ய குவிந்தனர்.
தொண்டி,
மாங்குரோவ் காடுகள்
தொண்டி அருகே உள்ள காரங்காடு கிராமத்தில் வனத்துறை மூலம் சூழல் சுற்றுலா மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு உள்ள மாங்குரோவ் காடுகளை சுற்றி பார்த்து அதன் அழகை ரசிப்பதற்கும், இங்கு வரும் வெளிநாட்டு பறவைகளை கண்டு ரசிக்கவும் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் இங்கு வருகின்றனர். மேலும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கடலுக்குள் சென்று சுற்றி பார்ப்பதற்காக படகு சவாரி செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தற்போது ஆயுத பூஜை, விஜயதசமியை முன்னிட்டு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால். நேற்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் இங்கு குவிந்தனர். சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் படகுகளில் சென்று மாங்குரோவ் காடுகளின் அழகையும், பறவைகளையும் கண்டு ரசித்தனர்.
கண்காணிப்பு பணி
இங்கு வனத்துறை மூலம் இயக்கப்படும் இரண்டு படகுகளில் சவாரி செய்வதற்கு பெரியவர்களுக்கு ரூ.200-ம், சிறியவர்களுக்கு ரூ.100-ம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. சுமார் 45 நிமிடங்கள் கடலுக்குள் படகுகளில் சென்று சுற்றுலா பயணிகள் சுற்றி பார்த்து செல்கின்றனர். சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறை சூழல் சுற்றுலா மையம் சார்பில் மீன் வறுவல், கணவாய் கட்லெட், குளிர்பானங்கள், தேனீர், தின்பண்டங்கள், உணவு வகைகள் விற்பனை செய்யப்படுகிறது. ராமநாதபுரம் வன உயிரின காப்பாளர் பகான் ஜெகதீஷ் சுதாகர், உத்தரவின் பேரில் வனத்துறை அலுவலர்கள் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.