திருவாரூர்
தேசிய நெடுஞ்சாலையின் மையப்பகுதியில் ரவுண்டானா அமைக்க வேண்டும்
|நீடாமங்கலம் அருகே தேசிய நெடுஞ்சாலையின் மையப்பகுதியில் ரவுண்டானா அமைக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இருவழிச்சாலை அமைக்கும் பணிகள்
தஞ்சை முதல் நாகப்பட்டினம் வரை இருவழிச்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. நீடாமங்கலம் அருகே கோவில்வெண்ணியில் தொடங்கி நகர், குருவாடி, நார்த்தாங்குடி, மாணிக்கமங்கலம் பகுதி வழியாக இந்த சாலை செல்கிறது. நீடாமங்கலம் அருகே நகர் கிராமத்திற்கும், குருவாடி கிராமத்திற்கும் இடையே பெரிய வெண்ணாற்றின் குறுக்கே பாலம் கட்டும் பணி பெருமளவில் நிறைவடைந்துள்ளது.
நீடாமங்கலம் கும்பகோணம் சாலையில் கொட்டையூர் கிராமத்திற்கும், நார்த்தாங்குடி கிராமத்திற்கும் இடையே இருவழிச்சாலை செல்வதால் நான்கு பாதைகளாக பிரிவு சாலை அப்பகுதியில் அமைந்துள்ளது.
தற்போது இருவழிச்சாலையின் பணிக்கான மணல் மற்றும் பொருட்கள் ஏற்றிய லாரிகள் உள்ளிட்ட வாகனங்கள் இருவழிச்சாலையில் சென்று வருகிறது.
விபத்துகள் ஏற்பட வாய்ப்பு
நீடாமங்கலம் கும்பகோணம் சாலையில் பஸ்கள் உள்ளிட்ட வாகனங்கள் பிரிவு சாலை வழியாக சென்று வருகின்றன. இவ்வாறு செல்லக்கூடிய வாகனங்கள் அதிவேகமாக செல்கிறது. இதனால் விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே நீடாமங்கலம் அருகே பிரிவு சாலையின் மையப்பகுதியில் ரவுண்டானா அமைத்து போக்குவரத்தை ஒழுங்குபடுத்த நெடுஞ்சாலைத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பஸ்பயணிகள் உள்ளிட்ட பொதுமக்களின் கோரிக்கையாகும்.