< Back
மாநில செய்திகள்
கோயம்பேடு பஸ் நிலையத்தில் வாலிபரை உல்லாசத்துக்கு அழைத்துச்சென்று சரமாரியாக தாக்கி பணம் பறிப்பு
சென்னை
மாநில செய்திகள்

கோயம்பேடு பஸ் நிலையத்தில் வாலிபரை உல்லாசத்துக்கு அழைத்துச்சென்று சரமாரியாக தாக்கி பணம் பறிப்பு

தினத்தந்தி
|
25 Jun 2022 9:56 AM IST

கோயம்பேடு பஸ் நிலையத்தில் வாலிபரை உல்லாசத்துக்கு அழைத்துச்சென்று சரமாரியாக தாக்கி பணம் பறித்த 4 பெண்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

காஞ்சீபுரத்தை சேர்ந்த 27 வயதான வாலிபர், கடந்த 2 வருடமாக சென்னை வடபழனியில் உள்ள விடுதியில் தங்கி, சமையல் வேலை செய்து வந்தார். அவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. நேற்று முன்தினம் இரவு சமையல் வேலையை முடித்துவிட்டு வடபழனி செல்ல கோயம்பேடு பஸ் நிலையத்தில் பஸ்சுக்காக காத்திருந்தார். அப்போது அங்கு வந்த 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், அந்த வாலிபரிடம் ஆபாச சைகை காட்டி, ஆசைவார்த்தை கூறி உல்லாசத்துக்கு அழைத்தார். இதில் சபலமடைந்த வாலிபர், அந்த பெண்ணுடன் உல்லாசமாக இருக்க ஆசைப்பட்டு அவருடன் சென்றார்.

அந்த பெண், வாலிபரை அழைத்துக்கொண்டு பஸ்சில் தாம்பரத்தில் உள்ள தனது வீட்டுக்கு சென்றார். அங்கு ஏற்கனவே இருந்த 3 பெண்களுடன், இந்த பெண்ணும் சேர்ந்து 4 பேரும் அந்த வாலிபரை வீட்டுக்குள் அழைத்துச்சென்று சரமாரியாக தாக்கினர். மேலும் அவரிடம் இருந்த பணம் மற்றும் ஏ.டி.எம். கார்டு ஆகியவற்றை பறித்துக்கொண்டு அங்கிருந்து அவரை விரட்டி அடித்தனர்.

தனது சபலத்தால் பணத்தை இழந்ததுடன், படுகாயம் அடைந்த வாலிபர் கோயம்பேடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வாலிபரை உல்லாசத்துக்கு அழைத்துச்சென்று பணத்தை பறித்த 4 பெண்களையும் தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்