கடலூர்
சிதம்பரம் நடராஜர் கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை குழு ஆய்வு செய்ய தீட்சிதர்கள் கடும் எதிர்ப்பு
|சிதம்பரம் நடராஜர் கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை குழு ஆய்வு செய்ய தீட்சிதர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது வரவு-செலவு கணக்குகளை காட்ட முடியாது என்று கூறியதால் குழுவினர் திரும்பிச் சென்றனர்
சிதம்பரம்
சட்ட விதிகளின்படி நிர்வாகம் செய்கிறார்களா?
புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலை பொது தீட்சிதர்கள் நிர்வாகம் செய்து வருகின்றனர். இக்கோவிலில் கனகசபை மீது பக்தர்கள் ஏறி நடராஜரை தரிசனம் செய்ய தீட்சிதர்கள் தடை விதித்தனர். இதை அறிந்த தமிழக அரசு, கோவில் கனகசபை மீது ஏறி பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி அளித்தது. அதன்பேரில் போலீஸ் பாதுகாப்புடன் பக்தர்கள் கனகசபை மீது ஏறி வழிபட்டு வருகின்றனர். இதற்கு தீட்சிதர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதனிடையே இந்த கோவிலை சட்ட விதிகளின்படி தீட்சிதர்கள் நிர்வாகம் செய்கிறார்களா? என்பதை கண்காணிக்க இந்து சமய அறநிலையத்துறை கடலூர் துணை ஆணையர் ஜோதியை தமிழக அரசு நியமித்தது.
நோட்டீசு
இவரது தலைமையிலான இந்து சமய அறநிலையத்துறை குழுவினர் ஜூன் மாதம் 7 மற்றும் 8-ந் தேதிகளில் நடராஜர் கோவிலில் ஆய்வு செய்ய வருவார்கள் என்றும், அன்றைய தினம் கோவில் வரவு-செலவு கணக்குகளை காண்பிக்க வேண்டும் என்றும் தீட்சிதர்களுக்கு அறநிலையத்துறை நோட்டீசு வழங்கியது.
இதற்கு தீட்சிதர்கள் கடும் எதிர்ப்பு மற்றும் கண்டனம் தெரிவித்ததோடு, கோவில் வரவு- செலவு கணக்குகளை கேட்க அரசுக்கு உரிமை இல்லை என்று பதில் நோட்டீசு அனுப்பினர்.
அமைச்சர் அறிவுறுத்தல்
இந்தநிலையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நேற்று முன்தினம் சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தார்.
அப்போது நடராஜர் கோவில் விவகாரத்தில் சுமுக தீர்வு ஏற்படும், கோவில் நிர்வாகத்தில் அரசு தலையிடாது என்றும் கூறினார். மேலும் ஆய்வு செய்ய வரும் இந்து சமய அறநிலையத்துறை குழுவுக்கு தீட்சிதர்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். ஆனால் தீட்சிதர்கள் அதை ஏற்றுக்கொள்ளவில்லை.
ஆய்வு செய்ய வந்த குழு
இருப்பினும் ஏற்கனவே அறிவித்தபடி இந்து சமய அறநிலையத்துறை சிறப்பு அதிகாரி சுகுமார் தலைமையில் இணை ஆணையர்கள் நடராஜன், லட்சுமணன், கோட்ட தணிக்கை அலுவலர் ராஜேந்திரன், உதவி ஆணையர் அரவிந்தன், கடலூர் இணை ஆணையர் அசோக்குமார், துணை ஆணையர் ஜோதி, உதவி ஆணையர் சந்திரன் ஆகியோர் அடங்கிய குழுவினர் சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆய்வு செய்வதற்காக நேற்று காலை 10 மணிக்கு வந்தனர். அவர்களுடன் சிதம்பரம் கோட்டாட்சியர் ரவி, தாசில்தார் அரிதாஸ் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
வரவு-செலவு கணக்கு கேட்டனர்
முதலில் அந்த குழுவினர், கனகசபை மீது ஏறி நடராஜரை தரிசனம் செய்தனர். பின்னர் 2014-ம் ஆண்டு முதல் வரவு-செலவு கணக்குகள், திருப்பணி குறித்த விவரங்கள், அவற்றுக்கான தொல்லியல் கருத்துரு, இந்து சமய அறநிலையத்துறை அனுமதி விவரம், மதிப்பீடு விவரம், சொத்துகளின் தற்போதைய நிலை, இந்து சமய அறநிலையத்துறை சட்ட விதிகளின்படி அங்கீகரிக்கப்பட்ட சொத்து பதிவேடு உள்ளிட்டவற்றை இந்து சமய அறநிலையத்துறை குழுவினர் தீட்சிதர்களிடம் கேட்டனர்.
தீட்சிதர்கள் கடும் எதிர்ப்பு
அப்போது வரவு- செலவு கணக்குகளை காட்ட தீட்சிதர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் அவர்கள், நடராஜர் கோவிலை ஆய்வு செய்ய நீங்கள் சட்ட ரீதியான குழு இல்லை. உங்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை. சட்டப்படி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுபடி ஆய்வுக்கு வந்திருக்க வேண்டும். இந்த ஆய்வு சட்ட விதிமுறையை பின்பற்றாமல் நடப்பதாக கூறி, 6 பக்க விளக்க அறிக்கையை வக்கீல் சந்திரசேகரன் மூலம் தீட்சிதர்கள் இந்து சமய அறநிலையத்துறை குழுவினரிடம் வழங்கினர்.
வரம்பு மீறிய செயல்
அந்த விளக்க அறிக்கையில், இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவிலை நிர்வகிப்பது போல் நடராஜர் கோவிலை நிர்வாகம் செய்ய முடியாது. இது பொது கோவில் இல்லை.
இதை மீறி ஆய்வு செய்ய வந்திருப்பது வரம்பு மீறிய செயல். இருப்பினும் அரசுக்கு ஒத்துழைப்பு கொடுப்போம். ஆனால் வரவு- செலவு கணக்குகளை காட்ட முடியாது என்று கூறப்பட்டுள்ளது. மேலும் சட்டப்பூர்வமாக ஆய்வு செய்ய வந்தால் நாங்கள் அனுமதிக்கிறோம் என்று கூறி வரவு- செலவு கணக்குகளை காண்பிக்க தீட்சிதர்கள் மறுத்து விட்டனர்.
திரும்பிச்சென்ற குழு
இதையடுத்து இந்து சமய அறநிலையத்துறை குழுவினர் கோவிலின் வரவு- செலவு கணக்குகளை ஆய்வு செய்யவில்லை. மாறாக கோவில் உள் மற்றும் வெளி பிரகாரங்களை பார்வையிட்ட குழுவினர் மதியம் 1 மணி வரை கோவிலில் இருந்து விட்டு திரும்பிச் சென்றனர். அப்போது அவர்கள், மாலை 4 மணிக்கு மீண்டும் வருவதாக கூறினர். அதன்படி மாலை 5.10 மணிக்கு இந்து சமய அறநிலையத்துறை குழுவினர் மீண்டும் நடராஜர் கோவிலுக்கு வந்து ஆய்வு சம்பந்தமாக தீட்சிதர்களிடம் பேசினர். அப்போது தீட்சிதர்கள், சட்டப்பூர்வமாக ஆய்வு செய்ய வந்தால் மட்டுமே அனுமதிப்போம் என்றனர். இதையடுத்து குழுவினர் நாளை(அதாவது இன்று) மீண்டும் ஆய்வு செய்ய வருவதாக கூறிவிட்டு மாலை 6 மணிக்கு திரும்பிச் சென்றனர்.
இதையொட்டி அசம்பாவித சம்பவம் ஏதும் நடைபெறாமல் தடுக்க சிதம்பரம் துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ்ராஜ் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.