தூத்துக்குடி
தட்டார்மடம் பஜாரில் அனைத்து கட்சிகளின் கொடிகம்பங்களையும் அகற்ற கோரிக்கை
|தட்டார்மடம் பஜாரில் அனைத்து கட்சிகளின் கொடி கம்பங்களையும் அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தட்டார் மடம்:
சாத்தான்குளம் அருகே தட்டார்மடத்தில் கடந்த ஏப்ரல் மாதம் விடுதலை சிறுத்தைகள் கட்சி கொடி கம்பம் நட்டி கொடியேற்ற முறையாக அனுமதி பெறாததால் போலீசார் தடை விதித்தனர். இதனால் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இதை தொடர்ந்து அப்பகுதியில் பிரச்சினை ஏற்பட்டது. இதுதொடர்பாக போலீசார் விடுதலை சிறுத்தைள் கட்சி நிர்வாகிகள் மீது வழக்குபதிவு செய்து விசாரித்து வந்தனர்.
இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு தட்டார்மடம் பஜாரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் திடீரென கட்சி கொடி கம்பத்தை நட்டி அதன் வீடியோவை வலைதளத்தில் பரவ விட்டனர். இதை அறிந்த தட்டார்மடத்தை சேர்ந்த பொதுமக்கள் நேற்று முன்தினம் சாத்தான்குளம் தாலுகா அலுவலகம் வந்தனர். அங்கு மண்டல துணைதாசில்தார் முகம்மது தாஹிரிடம் கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில், தட்டார்மடத்தில் அனைத்து ஜாதியினரும் ஒற்றுமையாக வாழ்ந்து வருகிறோம். இந்த நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் திடீரென்று கொடி கம்பம் நட்டியுள்ளனர். இதனால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை எழும் சூழல் உள்ளது. ஆதலால் அனைத்து மக்களும் எந்த பிரச்னையும் இல்லாமல் ஒற்றுமையுடன் இருக்க தட்டார்மடம் பஜாரில் உள்ள அனைத்து கொடி கம்பங்களையும் உடனடியாக அகற்ற வேண்டும்' என குறிப்பிட்டிருந்தனர்.
மனுவை பெற்ற மண்டல துணை தாசில்தார் உயர் அதிகாரிகளிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவதாக உறுதி அளித்தார். அதன்பேரில் அனைவரும் கலைந்து சென்றனர்.