தேனி
தாலுகா அலுவலகங்களில்கிடப்பில் போடப்பட்ட ஜமாபந்தி மனுக்கள்:தீர்வு காண பொதுமக்கள் வலியுறுத்தல்
|தாலுகா அலுவலகங்களில் ஜமாபந்தி மனுக்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளதால் அவற்றின் மீது விரைவில் தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஜமாபந்தி மனுக்கள்
வருவாய்த்துறை சார்பில், தேனி மாவட்டத்தில் உள்ள தேனி, ஆண்டிப்பட்டி, பெரியகுளம், போடி, உத்தமபாளையம் ஆகிய 5 தாலுகா அலுவலகங்களிலும் கடந்த மே மாதம் ஜமாபந்தி (வருவாய் தீர்வாயம்) நடந்தது. இதில் விவசாயிகள், பொதுமக்கள் தங்களின் நிலத்தின் பட்டா மாறுதல், திருத்தம் செய்தல், பெயர் மாற்றம், நில ஆவணங்களில் உள்ள தவறுகளை திருத்தம் செய்தல் உள்ளிட்டவை குறித்து மனுக்கள் கொடுத்தனர்.
அதில் சில மனுக்கள் ஜமாபந்தி நாட்களில் தீர்வு காணப்பட்டன. ஆனால் நிலுவையில் வைக்கப்பட்ட பல மனுக்கள் மீது மேல் நடவடிக்கை எடுக்கப்படாமல் 3 மாதங்களுக்கும் மேல் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அலைக்கழிப்பு
இந்நிலையில் போடி திருமலாபுரத்தை சேர்ந்த சந்திரன் என்பவர் தேனி மாவட்ட கலெக்டரிடம் நேற்று முன்தினம் ஒரு மனு கொடுத்தார். அதில், 'நான் வீட்டுமனை பட்டா மற்றும் பட்டா மாறுதல் தொடர்பாக போடி தாலுகா அலுவலகத்தில் நடந்த ஜமாபந்தியில் மனு கொடுத்தேன். அதற்கான ஆவணங்களையும் சமர்ப்பித்தேன். அதற்கு எந்த பதிலும் வராத நிலையில், மனுவை தள்ளுபடி செய்வதாக குறுஞ்செய்தி வந்துள்ளது. எனவே மனுவை பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கூறியிருந்தார்.
இதேபோல், போடி தாலுகா அலுவலகத்துக்கு தனது மனுவின் நிலை குறித்து அறிய வந்த விவசாயி ஒருவர் கூறுகையில், 'எனது விவசாய நிலம் தொடர்பாக கணினி பதிவேட்டில் பிழை உள்ளது. அதை சரி செய்வதற்காக ஜமாபந்தியில் மனு கொடுத்தேன். 3 மாதங்களாக அந்த மனு தாலுகா அலுவலகத்தில் கிடப்பில் உள்ளது. மனுவின் நிலை குறித்து அறிந்து கொள்ள நேரில் வந்தாலும் அலைக்கழிப்பு தான் ஏற்படுகிறது' என்றார்.
எனவே ஜமாபந்தியில் பெறப்பட்டு நிலுவையில் உள்ள மனுக்கள் மீது உரிய விசாரணை நடத்தி துரிதமாக தீர்வு காண வருவாய்த்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.