சென்னை
ரூ.50 கோடியில் தீவுத்திடல் நவீன மயமாகிறது அமைச்சர்கள் சேகர்பாபு, ராமச்சந்திரன் நேரில் ஆய்வு
|பொது சதுக்கம், கண்காட்சி அரங்குகள், தங்கும் விடுதிகளுடன் ரூ.50 கோடி மதிப்பீட்டில் தீவுத்திடல் நவீன மயமாகிறது. அதற்கான பணிகள் குறித்து அமைச்சர்கள் சேகர்பாபு, ராமச்சந்திரன் ஆய்வு செய்தனர்.
சென்னை தீவுத்திடலில் இந்து சமய அறநிலையத்துறை மற்றும் சி.எம்.டி.ஏ. துறை அமைச்சர் சேகர்பாபு, சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் ஆகியோர் நேற்று பார்வையிட்டனர். பின்னர் அமைச்சர் சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது:-
சென்னைத் தீவுத்திடலில் 30 ஏக்கர் நிலப்பரப்பில் இயற்கை வனப்புடன் நகர்ப்புற பொதுச் சதுக்கம், கண்காட்சி அரங்குகள், திறந்தவெளி திரையரங்கம், உணவகங்கள் போன்ற நவீன வசதிகளுடன் அமைய இருக்கிறது. இதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கிறது என்பதை ஆராய்ந்து, விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்படும். முதல்-அமைச்சரின் உத்தரவை பெற்று ஒப்பந்தப்புள்ளி கோரப்படும்.
ரூ.50 கோடியில் நவீனமயம்
பொதுவாக, சென்னைத் தீவுத்திடலில் மொத்தமிருக்கின்ற 30 ஏக்கர் நிலப்பரப்பானது கூவமாற்றின் ஒரு பக்கம் 18 ஏக்கர் நிலப்பரப்புடனும் மற்றொரு பக்கம் 12 ஏக்கர் நிலப்பரப்பையும் கொண்டுள்ளதால் அதனைக் கருத்தில் கொண்டு அதற்கேற்றாற்போல் இப்பகுதியில் உலகத்தரத்தில் கண்காட்சிகள், பொழுதுபோக்கு அம்சங்கள், தங்கும் விடுதிகள், சுற்றுலா வருபவர்களை கவரும் வகையிலும் ரூ.50 கோடியில் தீவுத்திடலை நவீனமயமாக்க திட்டமிட்டுள்ளோம். வட சென்னை ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் மூன்று ஆண்டுகளில் மேம்படுத்தப்படும் என்று முதல்-அமைச்சர் கூறியிருந்தார். இந்த திட்டமும் வட சென்னையினுடைய முன்னேற்த்தின் ஒரு பகுதியாக எடுத்துக்கொள்ளப்பட்டு, பணிகள் நடக்கும். இந்த திட்டத்திற்கான முழு வடிவத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இறுதி செய்வார்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின்போது, சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் க.மணிவாசன், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை முதன்மைச் செயலாளர் அபூர்வா, சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழும உறுப்பினர் செயலர் அன்சூல் மிஸ்ரா, சுற்றுலா இயக்குனர் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்குனர் சந்தீப் நந்தூரி, சி.எம்.டி.ஏ முதன்மை செயல் அலுவலர் கவிதா ராமு மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.