ராமநாதபுரம்
ராமேசுவரத்தில் வெடிகுண்டுகளுடன் வந்தவர்களை மடக்கி பிடித்தனர்
|ராமேசுவரத்தில் வெடிகுண்டுகளுடன் வந்த 16 பேரை மடக்கி பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பாதுகாப்பு ஒத்திகை என தெரியவந்ததால் பரபரப்பு அடங்கியது.
ராமேசுவரம்,
ராமேசுவரத்தில் வெடிகுண்டுகளுடன் வந்த 16 பேரை மடக்கி பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பாதுகாப்பு ஒத்திகை என தெரியவந்ததால் பரபரப்பு அடங்கியது.
பாதுகாப்பு ஒத்திகை
மும்பையில் கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவி தாக்குதல் நடத்திய சம்பவத்திற்கு பிறகு ஆண்டுதோறும் 6 மாதத்திற்கு ஒருமுறை தமிழகத்தில் சாகர்கவாச் என்ற பெயரில் பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தமிழகம் முழுவதும் கடலோர பகுதிகளில் சாகர் கவாச் என்ற பெயரில் பாதுகாப்பு ஒத்திகை நேற்று காலை 6 மணி முதல் தொடங்கியது.
ராமநாதபுரம் மாவட்டத்திலும் பாதுகாப்பு ஒத்திகை நேற்று நடந்தது. ராமேசுவரம், பாம்பன், தனுஷ்கோடி உள்ளிட்ட ராமநாதபுரம் மாவட்ட கடல் பகுதியில் கடலோர போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். இதை தவிர ராமேசுவரம் கோவில், அக்னிதீர்த்த கடற்கரை உள்ளிட்ட பல்வேறு முக்கிய இடங்களிலும் சட்ட ஒழுங்கு போலீசார், தனிப்பிரிவு, கியூபிரிவு உள்ளிட்ட போலீசாரும் மாறு வேடங்களில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
8 பேரை பிடித்தனர்
இந்த நிலையில் ராமேசுவரம் சங்குமால் மற்றும் ஓலைக்குடா கடல் பகுதியில் டம்மி வெடிகுண்டுகளுடன் தீவிரவாதிகள் போல் வந்த கமாண்டோ படை வீரர்கள் 8 பேரை கடலோரப்போலீசார் பிடித்தனர். இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
இதே போல் ராமேசுவரம் பஸ் நிலையம் பகுதியில் சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த 5 பேரை சட்ட ஒழுங்கு மற்றும் தனிப்பிரிவு போலீசார் இணைந்து பிடித்து விசாரணை செய்தனர். மேலும் தங்கச்சிமடம் பகுதியில் 3 பேர் சிக்கினர்.
இந்த 16 பேரிடம் இருந்தும் டம்மி வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்படுவது போல் ஒத்திகை நடந்தது. மேலும் இவர்கள் ராமேசுவரம் கோவில், டி.வி. கோபுரம், பாம்பன் பாலம், ரெயில் நிலையம், உணவுப்பொருள் பாதுகாப்பு குடோன் உள்ளிட்ட இடங்களில் தாக்குதல் நோக்கத்துடன் வருபவர்களை முறியடிப்பது எப்படி? என்பது பற்றியும் ஒத்திகை நடந்தது. இன்று மாலை 6 மணி வரை இந்த பாதுகாப்பு ஒத்திகை நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.