ஈரோடு
பெருந்துறை, தாளவாடியில் விநாயகர் சிலைகள் ஊர்வலம்
|பெருந்துறை, தாளவாடியில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடந்தது.
பெருந்துறை, தாளவாடியில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடந்தது.
பெருந்துறை
சதுர்த்தியை முன்னிட்டு, பெருந்துறை நகரில் பல்வேறு இடங்களில் மொத்தம் 20 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்தன. இந்த சிலைகள் அனைத்தும் நேற்று வாகனங்களில் ஏற்றப்பட்டு, பவானி ரோட்டில் உள்ள விநாயகர் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டன. பின்னர் அங்கிருந்து ஊர்வலம் தொடங்கியது.
பங்களா வீதி, ஈரோடு ரோடு, கோவை மெயின் ரோடு, அக்ரஹார வீதி, அரசு ஆஸ்பத்திரி ரோடு, போலீஸ் நிலையம், ஈரோடு ரோடு வழியாக கந்தாம்பாளையம் சென்று அங்கிருந்து பவானி ரோடு வழியாக பவானி, கவுந்தப்பாடியை அடைந்து வைரமங்கலம் பவானி ஆற்றில் சிலைகள் கரைக்கப்பட்டன. இதையொட்டி பெருந்துறையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு செய்யப்பட்டிருந்தது.
தாளவாடி
இதேபோல் தாளவாடியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்து முன்னணி சார்பில் 16 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. இந்த சிலைகள் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் வைக்கப்பட்டு ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது. ஊர்வலத்துக்கு இந்து முன்னணி மாவட்டத் செயலாளர் நாகராஜ் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் செந்தில்குமார், மாவட்ட தலைவர் குருசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சாம்ராஜ்நகர் ஹஜாத் இந்து சேனா தலைவர் பிரித்விராஜ் காவிக் கொடி அசைத்து ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். தாளவாடி அண்ணாநகரில் தொடங்கிய ஊர்வலம் மேளதாளம் முழங்க ஆற்றுபாலம் பூஜேகவுடர் வீதி, பஸ்நிலையம், ஒசூர்ரோடு, சாம்ராஜ்நகர் ரோடு, கனகதாசர் வீதி, சத்திரோடு வழியாக பஸ் நிலையம் சென்றடைந்தது.
அங்கு இந்து முன்னணி கர்நாடக மாநில தலைவர் உல்லாஸ் பேசினார். பின்னர் அங்கிருந்து ஊர்வலம் புறப்பட்டு தலமலை ரோட்டில் முடிவடைந்தது. அங்குள்ள ஆற்றங்கரையோரம் விநாயகர் சிலைகள் பூஜைகள் செய்யப்பட்டு ஆற்றில் கரைக்கப்பட்டன. ஊர்வலத்தையொட்டி ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் தலைமையில் உதவி துணை போலீஸ் சூப்பிரண்டு ஜானகிராமன், சத்தியமங்கலம் துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரசேகர், சேகர் உள்பட ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.