ஈரோடு
பண்ணாரி மாரியம்மன் கோவிலில் நடிகை சமந்தா சாமி தரிசனம்
|பண்ணாரி மாரியம்மன் கோவிலில் நடிகை சமந்தா சாமி தரிசனம் செய்தாா்
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே பிரசித்திபெற்ற பண்ணாரி மாரியம்மன் கோவில் உள்ளது. நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து அம்மனை தரிசனம் செய்துவிட்டு செல்வார்கள். இதேபோல் சினிமா நட்சத்திரங்கள், அரசியல் தலைவர்கள், பிரமுகர்களும் அம்மனை தரிசிக்க கோவிலுக்கு வருவார்கள்.
இந்தநிலையில் பிரபல நடிகை சமந்தா நேற்று மாலை 3 மணி அளவில் பண்ணாரி மாரியம்மன் கோவிலுக்கு வந்தார். அவருடன் உதவியாளர்கள் சிலரும் வந்திருந்தனர். கோவில் நிர்வாகம் சார்பில் சமந்தாவுக்கு வரவேற்று அளிக்கப்பட்டது. அதன்பின்னர் கோவிலுக்குள் சென்ற சமந்தா பண்ணாரி அம்மனை பார்த்து மனமுருக வேண்டினார். தொடர்ந்து அவருக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. சில நிமிடங்களில் அங்கிருந்து பக்தர்கள் ஓய்வெடுக்கும் அறைக்கு சென்றார். அப்போது கோவில் பணியாளர்கள் சமந்தாவை சூழ்ந்து கொண்டு குழு புகைப்படம் எடுத்து மகிழந்தனர். அதற்குள் சமந்தா கோவிலுக்கு வந்து தகவல் பரவியதால் ரசிகர்கள் கோவில் வளாகத்தில் திரண்டனர். அதனால் கோவிலில் இருந்து வெளியே வந்த அவர் ரசிகர்களுடன் செல்பி எடுத்துக்கொண்டார். பின்னர் அனைவரையும் பார்த்து கை அசைத்தபடி காரில் ஏறி சென்றார்.
நடிகை சமந்தா சில மாதங்களுக்கு முன்பு உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்தார். அதில் இருந்து குணமடைய வேண்டும் என்று பண்ணாரி மாரியம்மனிடம் அவர் வேண்டி இருக்கலாம். தற்போது குணமானதால் வேண்டுதல் நிறைவேற்றுவதற்காக அவர் பண்ணாரி மாரியம்மன் கோவிலுக்கு வந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.