ஈரோடு
பண்ணாரி மாரியம்மன் கோவிலில் 27 ஜோடிகளுக்கு இலவச திருமணம்
|சத்தியமங்கலம் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் 27 ஜோடிகளுக்கு இலவச திருமணத்தை அமைச்சர் சு.முத்துசாமி நடத்தி வைத்தார்.
புஞ்சைபுளியம்பட்டி
தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில், ஆண்டுதோறும் 500 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடத்தி வைக்கப்படும் என சட்டமன்றத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி ஈரோடு இணை ஆணையர் மண்டலத்துக்குட்பட்ட கோவில்களில் கடந்த டிசம்பர் மாதம் 23 ஜோடிகளுக்கு இலவச திருமணம் செய்து வைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து 2-ம் கட்டமாக இலவச திருமணங்களுக்காக விண்ணப்பங்கள், சான்றிதழ்கள் அந்தந்த கோவில்கள் வாரியாக பெறப்பட்டு, அதனை அதிகாரிகள் பல்வேறு கட்டமாக ஆய்வு செய்து தகுதியானவர்களை தேர்வு செய்தனர். இதனைத்தொடர்ந்து பிரசித்திபெற்ற பண்ணாரி மாரியம்மன் கோவிலில் 27 ஜோடிகளுக்கு நேற்று இலவச திருமணம் நடைபெற்றது.
புதுமண ஜோடி ஒவ்வொருவருக்கும் ரூ.75 ஆயிரம் மதிப்பில் 4 கிராம் தங்கத்தாலி, வெள்ளி மெட்டி, பட்டுப்புடவை, பட்டு வேட்டி, பட்டுத்துண்டு, கைக்கெடிகாரம், கட்டில், மெத்தை, பாய், தலையணைகள், போர்வை, குத்து விளக்கு, இரும்பு பீரோ, வெட்கிரைண்டர், மிக்சி, கேஸ் அடுப்பு உள்ளிட்ட 26 பொருட்கள் சீர் வரிசையாக வழங்கப்பட்டது. 27 ஜோடிகளுக்கு மொத்தம் ரூ.20.25 லட்சம் மதிப்பில் சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டன.