தமிழ்நாட்டிலும், கோவையிலும் மக்கள் ஒருபோதும் பா.ஜ.க.வை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் - ஜெயக்குமார்
|மத்திய நிதி மந்திரி பங்குபெற்ற கூட்டத்தில் ஓட்டல் உரிமையாளர் தவறாக பேசவில்லை என்று ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை,
கோவையில் நடைபெற்ற தொழில் முனைவோர் கலந்தாய்வு கூட்டத்தில் ஜி.எஸ்.டி. குறித்து ஓட்டல் உரிமையாளர்கள் சங்க நிர்வாகியும், அன்னபூர்ணா ஓட்டல் நிறுவனருமான சீனிவாசன் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனிடம் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார்.
அவர் பேசும்போது, இனிப்புக்கு 5 சதவீதம் ஜி.எஸ்.டி. இருக்கும் நிலையில், காரத்துக்கு 12 சதவீதம் ஜி.எஸ்.டி. உள்ளது. வெறும் பண்ணுக்கு ஜி.எஸ்.டி. இல்லை. ஆனால் ஜாமுடன் பண் வாங்கினால் ஜி.எஸ்.டி. உள்ளது. இதுபோன்ற முரண்பாடுகளை களைய வேண்டும் என்று கூறினார். இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகியது.
இதையடுத்து நிர்மலா சீதாராமனை அன்னபூர்னா நிறுவனர் சீனிவாசன் நேரில் சந்தித்து வருத்தம் தெரிவித்தார். பின்னர் அவர் தான் எந்த கட்சியையும் சாராதவன் என்றும், ஓட்டல் தொழிலுக்காக அவ்வாறு கூறியதாகவும் வருத்தம் தெரிவித்தார். இது தொடர்பான வீடியோவும் தற்போது வைரலாகி வருகிறது. இந்த வீடியோவுக்கு திமுக எம்.பி.கனிமொழி, காங்கிரஸ் எம்.பி.ஜோதிமணி ஆகியோர் மட்டுமின்றி ராகுல்காந்தியும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில்,
"அதிகார மமதையில் ஆளும் பாஜக அரசு!
மத்திய நிதி மந்திரி பங்குபெற்ற கூட்டத்தில் பேசிய அன்னபூர்ணா ஓட்டல் உரிமையாளர் எந்தவிதத்திலும் தவறாக பேசவில்லை. தங்கள் தொழிலில் சந்திக்கும் சில பிரச்சினைகளை கோரிக்கையாக முன் வைத்தார்.
அதற்காக அவரை அழைத்து மிரட்டி மன்னிப்பு கேட்க வைத்திருப்பது தமிழ்நாட்டு மக்களையே கேவலப்படுத்தும் செயல்! அதை வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டிருப்பது பாசிசத்தின் உச்சம்!
கோயம்புத்தூர் மக்கள் பாசத்தில் மட்டுமல்ல ரோசத்திலும் அதிகமானவர்கள் தான்!
இனி எந்த காலத்திலும் தமிழ்நாட்டிலும் கோவையிலும் மக்கள் பாஜக-வை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்!
இந்த செயலால் இன்னுமொரு நூற்றாண்டு ஆனாலும் பாஜக இதற்காக வருந்தும்!" என்று தெரிவித்துள்ளார்.