ஈரோடு
நம்பியூர், கவுந்தப்பாடி, புஞ்சைபுளியம்பட்டியில் விநாயகர் சிலைகள் ஊர்வலம்
|நம்பியூர், கவுந்தப்பாடி, புஞ்சைபுளியம்பட்டியில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடந்தது.
நம்பியூர், கவுந்தப்பாடி, புஞ்சைபுளியம்பட்டியில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடந்தது.
பவானி
விநாயகர் சதுர்த்தியையொட்டி கடந்த 31-ந் தேதி பவானி நகரில் 65 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. இதில் 30 விநாயகர் சிலைகள் அன்றே பவானி ஆற்றில் கரைக்கப்பட்டன. நேற்று முன்தினம் மீதம் உள்ள 35 சிலைகளும் பவானி ஆற்றில் கரைக்கப்பட்டன.
இந்த நிலையில் சேலம் மாநகர் சிவானந்தபுரம் பகுதியில் இருந்து ஆண்கள், பெண்கள் என 100-க்கும் மேற்பட்டோர் அவரவர் வீடுகளில் வைத்து வழிபட்ட விநாயகர் சிலைகளை லாரியில் எடுத்து பவானி கூடுதுறைக்கு வந்தனர். பின்னர் அவர்கள் தாங்கள் கொண்டு வந்த விநாயகர் சிலைகளை பவானி கூடுதுறை ஆற்றில் கரைத்தனர். இதேபோல் நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் ராஜகணபதி கோவிலில் வைக்கப்பட்ட விநாயகர் சிலையையும் நேற்று காவிரி கூடுதுறையில் கரைத்தனர்.
நம்பியூர்
இதேபோல் நம்பியூர் அருகே உள்ள கொன்னமடை பகுதியை சேர்ந்த விவசாயிகள் விநாயகர் சதுர்த்தியையொட்டி விநாயகர் சிலையை பிரதிஷ்ைட செய்து தங்களுடைய தோட்டப்பகுதியில வைத்தனர். பின்னர் விவசாயம் செழிக்கவும், மக்கள் நலமுடன் வாழவும் விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டு வந்தனர். இதைத்தொடர்ந்து நேற்று கீழ்பவானி வாய்க்காலில் விநாயகர் சிலை கரைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதற்காக விநாயகர் சிலையை மாட்டுவண்டியில் ஏற்றி நம்பியூரில் உள்ள முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்தனர். பின்னர் நம்பியூர் அருகே உள்ள மூணாம்பள்ளி கீழ்பவானி வாய்க்காலுக்கு சென்று கரைத்தனர். இதில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.
கவுந்தப்பாடி
சதுர்த்தியை முன்னிட்டு கவுந்தப்பாடி மற்றும் சுற்றுப்பகுதிகளில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு வந்தன. இதைத்தொடர்ந்து நேற்று மாலை 4.30 மணி அளவில் இந்து முன்னணி மாவட்ட பொதுசெயலாளர் பி.பி.ஸ்ரீதர் தலைமையில் விநாயகர் சிலைகளை ஊர்வலமாக பெருந்தலையூர் எடுத்து சென்றனர்.
பின்னர் அங்குள்ள ஆற்றில் சிலைகளை கரைத்தனர். இதில் இந்து முன்னணி ஒன்றிய தலைவர் இந்து செல்வன், பாரதீய ஜனதா கட்சி நிர்வாகிகள், இந்து முன்னணி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
புஞ்சைபுளியம்பட்டி
புஞ்சைபுளியம்பட்டி நகரம், பவானிசாகர் ஒன்றிய இந்து முண்ணணி சார்பில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நேற்று மாலை நடைபெற்றது. பல்வேறு இடங்களில் வைத்து இருந்த 50-க்கும் மேற்பட்ட சிலைகள் வாகனங்களில் டானா புதூர் மாரியம்மன் கோவில் முன்பு எடுத்து வரப்பட்டது. பின்னர் அங்கிருந்து ஊர்வலத்தை மாவட்ட தலைவர் குருசாமி கொடி அசைத்து தொடங்கி வைத்தார். திருப்பூர் மாநகர மாவட்ட செயலாளார் கேசவன் முன்னிலை வகித்தார். ஊர்வலம் சுல்தான் ரோட்டை அடைந்ததும் அங்கு பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பாரதீய ஜனதா கட்சி தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா கலந்துகொண்டு பேசினார். பின்னர் இரவு பவானிசாகர் பகுடுதுறையில் சிலைகள் கரைக்கப்பட்டன. ஊர்வலத்தையொட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் தலைமையில் 370 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.