தேனி
குச்சனூர் சனீஸ்வர பகவான் கோவிலில் ஆடி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
|சின்னமனூர் அருகே குச்சனூர் சனீஸ்வர பகவான் கோவிலில் ஆடி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
சின்னமனூர் அருகே உள்ள குச்சனூரில் சுயம்பு சனீஸ்வர பகவான் கோவில் உள்ளது. தமிழகத்தில் திருநள்ளாறுக்கு அடுத்தபடியாக புகழ்பெற்ற சனி வழிபாடு மற்றும் தோச நிவர்த்தி தலமாக இந்த கோவில் விளங்குகிறது. இங்கு வரும் பக்தர்கள் கோவிலின் முன்பகுதியில் ஓடும் சுரபி நதியில் நீராடி எள் தீபமிட்டு, சனி பகவானுக்கு விளக்கேற்றி வழிபடுவார்கள்.
தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து சனி பகவானை தரிசித்து செல்வார்கள். இங்கு ஆண்டுதோறும் ஆடி திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படும். மேலும் ஆடி மாத சனிக்கிழமைகளில் சிறப்பு வழிபாடும் நடைபெறும். இந்நிலையில் இந்த ஆண்டு ஆடி திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் நடந்த வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
இந்த திருவிழா அடுத்த மாதம் (ஆகஸ்டு) 20-ந்தேதி வரை நடைெபறும். திருவிழாவில் ஆடி மாத 2-வது சனிக்கிழமை சனீஸ்வர பகவான், நீலாதேவி திருக்கல்யாணம் நடைபெறும். 3-வது சனிக்கிழமை ஆடிப்பெருக்கின் போது பகவானுக்கு மஞ்சள் காப்பு சாற்றுதல், இரவில் சாமி புறப்பாடு உள்ளிட்ட சிறப்பு பூஜை நடைபெறும்.
4-வது வாரத்தில் சோனை கருப்பசாமி பொங்கல் விழாவும், 5-வது சனிக்கிழமையான ஆகஸ்டு 20-ந்தேதி கொடி இறக்கப்பட்டு விழா நிறைவு பெறும். இந்த திருவிழாவையொட்டி தேனி, கம்பம், ஆண்டிப்பட்டி, போடி, தேவாரம் உள்ளிட்ட மாவட்டத்தின் முக்கிய பகுதிகளில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.