< Back
மாநில செய்திகள்
கே.கே.நகர் ரெயில்வே நுழைவு பாலத்தில்சீரமைப்பு பணி காரணமாக போக்குவரத்து மாற்றம்
ஈரோடு
மாநில செய்திகள்

கே.கே.நகர் ரெயில்வே நுழைவு பாலத்தில்சீரமைப்பு பணி காரணமாக போக்குவரத்து மாற்றம்

தினத்தந்தி
|
30 March 2023 9:47 PM GMT

ஈரோடு கே.கே.நகர் ரெயில்வே நுழைவுபாலத்தில் பராமரிப்பு பணி காரணமாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்ட நிலையில் முறையான சாலை வசதி செய்யப்படாததால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர்.

ஈரோடு கே.கே.நகர் ரெயில்வே நுழைவுபாலத்தில் பராமரிப்பு பணி காரணமாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்ட நிலையில் முறையான சாலை வசதி செய்யப்படாததால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர்.

நுழைவு பாலம் பராமரிப்பு பணி

ஈரோடு ரெயில் நிலையத்துக்கும் தொட்டிபாளையம் ரெயில் நிலையத்துக்கும் இடைப்பட்ட பகுதியில் கே.கே.நகர் ரெயில்வே நுழைவுபாலம் (எண்.361) அமைந்து உள்ளது. ஈரோடு-சென்னிமலை ரோட்டின் குறுக்கே இந்த ரெயில்வே நுழைவுபாலம் அமைந்து உள்ளது.

இந்த பாலத்தில் பராமரிப்பு பணிகள் செய்ய ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்து உள்ளது. இந்த பணிகள் வருகிற ஏப்ரல் 24-ந் தேதி வரை நடைபெறும் என்று ரெயில்வே நிர்வாகம் அறிவித்து உள்ளது. அதைத்தொடர்ந்து கடந்த 4 நாட்களுக்கும் மேலாக கே.கே.நகர் பகுதியில் போக்குவரத்து மாற்றம் தொடர்பான எச்சரிக்கை அறிவிப்பு பலகை வைக்கப்பட்டு இருந்தது.

பயணிகள் அவதி

இந்தநிலையில் நேற்று பாலத்தின் அடியில் வாகனங்கள் செல்ல முடியாதபடி தடுப்பு வேலி அமைக்கப்பட்டு, வாகனங்கள் மாற்றுப்பாதையில் செல்ல அறிவிப்பு பலகை வைக்கப்பட்டு இருந்தது. நுழைவுபாலத்தில் நேற்று பணிகளும் தொடங்கி நடந்து வருகிறது. ஆனால் மாற்று சாலையில் முறையான ரோடு வசதி செய்யப்படாததால் வாகன ஓட்டிகள் மிகுந்த அவதிக்கு உள்ளானார்கள்.

ஈரோடு-சென்னிமலை ரோடு மிகுந்த நெரிசலான ரோடாகும். இந்த சாலை வழியாக ஏராளமான வாகனங்கள் தினமும் சென்று வருகின்றன. புகழ் பெற்ற பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள் உள்ளன. இந்த பள்ளி, கல்லூரி வாகனங்கள் அனைத்தும் கே.கே.நகர் ரெயில்வே நுழைவுபாலம் வழியாக சென்று வந்தன. ஆனால் சாலை அடைக்கப்பட்டதால் நேற்று காலையில் இருந்தே வாகன ஓட்டிகள் எந்த வழியாக செல்வது என்று தெரியாமல் திணறினார்கள். அரசு, தனியார் பஸ்கள் என்று மக்கள் பயணம் செய்யும் வாகனங்கள் எந்த வழியாக செல்கிறது என்று தெரியாமல் பஸ் நிறுத்தங்களில் பயணிகள் காத்திருந்து ஏமாற்றம் அடைந்தனர்.

மாற்று பாதைகள்

ஈரோட்டில் இருந்து செல்லும் வழியில் அரசு ஐ.டி.ஐ. அருகே முத்தம்பாளையம் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் பகுதி 3 வழியாக மாற்று வழி அறிவிக்கப்பட்டு உள்ளது. அதற்கு அடுத்து கே.கே.நகர் (கலைஞர் கருணாநிதி நகர்) வழியாக ரெயில்வே தண்டவாளத்தை ஒட்டி செல்லும் மண் ரோட்டில் சென்று தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் முத்தம்பாளையம் திட்டம் 7 வழியாக சென்று ரங்கம்பாளையம் செல்லும் சாலை மாற்று வழியாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதுபோல் சென்னிலையில் இருந்து ஈரோடு வர ரங்கம்பாளையம், முத்தம்பாளையம் பகுதி 7, ரெயில்வே தண்டவாளத்தை ஒட்டிய மண்ரோடு, கே.கே.நகர் சாலையும், பாலத்தை ஒட்டி இருக்கும் லட்சுமி கார்டன், சாஸ்திரிநகர் அல்லது பாரதி நகர் வழியாக செல்லும் சாலையும் மாற்று ரோடாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

சாலை வசதி வேண்டும்

ஆனால் இதில் எந்த ரோடும் வாகன ஓட்டிகள் குழப்பம் இன்றி தாங்கள் செல்ல வேண்டிய ரோட்டை அடையும் அறிவிப்பு பலகைகள் எங்கும் வைக்கப்படவில்லை. குறிப்பாக சென்னிமலையில் இருந்து ஈரோடு வரவும், ஈரோட்டில் இருந்து சென்னிமலை செல்லவும் கே.கே.நகர், முத்தம்பாளையம் பகுதி 7 வழிப்பாதை வாகன ஓட்டிகள் எளிதாக கடந்து செல்லும் சாலையாக இருக்கிறது. கே.கே.நகரில் இருந்து ரெயில்வே தண்டவாளத்தை ஒட்டிய மண் ரோடு புதர் மண்டி கிடக்கிறது. இந்த ரோட்டை சீரமைத்தால் மிகவும் எளிதாக வாகனங்கள் வந்து செல்ல முடியும். இதுபோல் கே.கே.நகருக்கும் முத்தம்பாளையம் பகுதி-7 க்கும் இடைப்பட்ட பகுதியில் இணைப்பு சாலை போடுவதன் மூலம் பொதுமக்கள் சிரமமின்றி பயணம் செய்யலாம்.

இதன் மூலம் போக்குவரத்துக்கழக பஸ்கள், தனியார் பஸ்கள், பள்ளி, கல்லூரி வாகனங்கள், பிற கார்கள், கனரக வாகனங்கள், மோட்டார் சைக்கிள்கள் என்று அனைத்து வகை வாகனங்களும் தேவையில்லாமல் அதிக தூரம் சுற்றிச்செல்வதால் ஏற்படும் பயண நேரம், எரிபொருள் செலவு ஆகியவற்றை தவிர்க்க முடியும்.

எனவே ரெயில்வே நிர்வாகம், தமிழ்நாடு அரசின் நெடுஞ்சாலைத்துறை, ஈரோடு மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் இந்த விஷயத்தில் அக்கறை காட்டி பொதுமக்கள், பயணிகள் சிரமமின்றி செல்ல சாலை வசதி ஏற்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Related Tags :
மேலும் செய்திகள்