தேனி
கம்பம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் விளைபொருட்களை இருப்பு வைத்து விவசாயிகள் கடன் பெறலாம்: அதிகாரி தகவல்
|கம்பம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் விளைபொருட்களை இருப்பு வைத்து விவசாயிகள் கடன் பெறலாம் என்று அதிகாரி தெரிவித்தார்
கம்பம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் விளைபொருட்களை இருப்பு வைத்து விவசாயிகள் கடன் பெற்றுக் கொள்ளலாம் என வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூட கண்காணிப்பாளர் சண்முகப் பிரியா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கம்பம் பகுதியில் முதல் போக நெல் அறுவடை பணி தொடங்கியுள்ளது. இந்நிலையில் கம்பம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் தேசிய வேளாண் சந்தை (இ-நாம்) மூலமாக மறைமுக ஏலத்தில் உள்ளுர் மற்றும் வெளியூர் வியாபாரிகள் கலந்து கொண்டு விவசாயிகளின் விளைபொருட்களை கொள்முதல் செய்து வருகின்றனர். எனவே விவசாயிகள் விளைபொருட்களை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் இ-நாம் வழியாக விற்பனை செய்து பயனடையலாம். மேலும் கம்பம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை இருப்பு வைத்து 5 சதவீத வட்டியில் அதிகபட்சமாக ரூ.3 லட்சம் வரை பொருளீட்டு கடன் பெற்றுக்கொள்ளலாம். வியாபாரிகள் தங்கள் விளைபொருட்களை இருப்பு வைத்து 9 சதவீத வட்டியில் அதிகபட்சமாக ரூ.2 லட்சம் வரை பொருளீட்டுக்கடன் பெற்றுக் கொள்ளலாம். எனவே விவசாயிகள், வியாபாரிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.