ஈரோடு
ஈரோட்டில்பலத்த காற்றுடன் கொட்டி தீர்த்த மழை
|ஈரோட்டில் பலத்த காற்றுடன் மழை கொட்டி தீர்த்தது.
ஈரோட்டில், பலத்த காற்றுடன் மழை கொட்டி தீர்த்தது.
கடும் வெயில்
ஈரோடு மாநகர் பகுதியில் கடந்த சில நாட்களாக அக்னி வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்தது. தினமும் 100 டிகிரிக்கும் மேல் வெயில் கொளுத்தி வந்தது. இதனால் பொதுமக்கள் வெளியில் செல்ல முடியாமல் மிகவும் சிரமப்பட்டனர்.
குறிப்பாக வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதனால் மழை வருமா? என்று மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்தனர்.
கொட்டி தீர்த்த மழை
இதைத்தொடர்ந்து மாலை 5.45 மணிக்கு சாரல் மழை பெய்யத்தொடங்கியது. சிறிது நேரத்தில் இந்த மழை வலுபெற்று பலத்த மழையாக பெய்தது. அப்போது பலத்த காற்றும் வீசியது. இந்த மழை 45 நிமிடங்கள் வரை கொட்டி தீர்த்தது.
இதன் காரணமாக ஈரோட்டில் அகில்மேடு வீதி, முனிசிபல் காலனி, பெருந்துறை ரோடு, மேட்டூர் ரோடு, ஆர்.கே.வி. ரோடு, கருங்கல்பாளையம், பெரியவலசு, நாடார் மேடு, சத்தி ரோடு, பவானிரோடு, பி.பி.அக்ரஹாரம் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
கடும் சிரமம்
ஈரோடு பஸ் நிலையத்தில் புதிதாக அமைக்கப்பட்ட நிழற்குடை மிகவும் உயரமாக உள்ளதால் மழைச்சாரல் பயணிகள் மீது விழுந்தது.
மேலும் அங்கு இருக்கைகளும் இல்லாததால் பஸ்சுக்காக காத்திருந்த பயணிகள் மிகவும் சிரமப்பட்டனர்.
இதேபோல் மழை காரணமாக ஈரோடு நேதாஜி காய்கறி மார்க்கெட்டுக்கு காய்கறிகள் வாங்க வந்த பொதுமக்களும் சிரமப்பட்டனர். மழையால் இரவு நேரத்தில் குளிர்ந்த காற்று வீசியது.