ஈரோடு
ஈரோட்டில்காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
|ஈரோட்டில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினா்
ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மை பிரிவு சார்பில், பி.பி.அக்ரஹாரம் பஸ் நிறுத்தம் அருகில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு சிறுபான்மை பிரிவு மாநில துணைத்தலைவர் ஜவகர் அலி தலைமை தாங்கினார். காங்கிரஸ் கட்சி மாநகர துணைத்தலைவர் ராஜேஷ் ராஜப்பா முன்னிலை வகித்தார். மாநகர பொறுப்பாளர் திருச்செல்வம் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.
மணிப்பூர் கலவரத்தில் பழங்குடி இன பெண்களை நிர்வாண ஊர்வலமாக அழைத்து சென்று, பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்தை தடுக்க தவறிய மணிப்பூர் மாநில அரசையும், மத்திய பா.ஜ.க. அரசையும் கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மணிப்பூர் மாநில அரசையும், பா.ஜ.க. அரசையும் கண்டித்து கோஷங்கள் எழுப்பினார்கள். இதில் சிறுபான்மை பிரிவு மாநகர தலைவர் மீரான், துணைத்தலைவர் பாஷா, முன்னாள் மாவட்ட தலைவர் ராஜேந்திரன், ஊடகப்பிரிவு தலைவர் முகமது அர்சத் உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.