ஈரோடு
ஈரோட்டில்பெண்களை கவரும் ஆடை-அலங்கார கண்காட்சி
|ஈரோடு ஆலயமணி மகாலில் பெண்களை கவரும் வகையில் நடந்து வரும் ஆடை அலங்கார கண்காட்சி இன்று (ஞாயிற்றுக்கிழமை) நிறைவுபெறுகிறது.
ஈரோட்டில் பெண்களை கவரும் வகையில் நடந்து வரும் ஆடை அலங்கார கண்காட்சி இன்று (ஞாயிற்றுக்கிழமை) நிறைவுபெறுகிறது.
பெண்களை கவரும் கண்காட்சி
ஈரோடு திண்டல் அருகே ஆலயமணி மகாலில் 2 நாட்கள் கண்காட்சி நேற்று தொடங்கியது. 45 அரங்குகளுடன் இந்த கண்காட்சி நடக்கிறது. இதில் பெண்களை கவரும் ஆடை ரகங்கள், அலங்கார நகைகள், தினமும் பெண்கள் பயன்படுத்தும் கைப்பைகள், பெண்களின் அழகு பராமரிப்பு சாதனங்கள், வீடுகளுக்கு தேவையான பொருட்கள், பாரம்பரிய உணவு வகைகள் உள்ளன.
இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட சோப்புகள் மற்றும் அலங்கார பொருட்கள், வெள்ளி பாத்திரங்கள், பூஜை பொருட்கள் என்று மிக வித்தியாசமான பொருட்கள் குவிக்கப்பட்டு இருக்கின்றன.
மகளிர் தொழில் முனைவோர்
இதுகுறித்து கண்காட்சி நடத்தி வரும் நிா்வாகிகள் கூறியதாவது:-
தீபாவளியை முன்னிட்டு இந்த கண்காட்சி நடத்தப்படுகிறது. முழுக்க முழுக்க இளம் பெண்கள், குடும்ப பெண்களுக்கு 'லைப் ஸ்டைல்' பொருட்களை தேர்வுசெய்யும் இடமாக இது உள்ளது. பெங்களூரு, சென்னை, கோவை, திருப்பூர் மற்றும் ஈரோட்டை சேர்ந்த மகளிர் தொழில் முனைவோர்கள் இந்த கண்காட்சியில் பங்கேற்று இருக்கிறார்கள். தொழில் முனைவோர்களாக பெண்கள் உருவாக வேண்டும் என்று அவர்களை ஊக்குவிக்கும் வகையில் பல ஆண்டுகளாக இந்த கண்காட்சியை நடத்துகிறோம். எனவே மகளிர் தொழில் முனைவோர் எங்களை தொடர்பு கொண்டால் இனிவரும் கண்காட்சிகளில் அவர்களும் பங்குபெற வாய்ப்புகள் அளிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கண்காட்சியில் ஈரோடு மாநகரின் பல பகுதிகளில் இருந்தும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்தும் ஏராளமான பெண்கள் குடும்பத்துடன் வந்து பொருட்கள் வாங்கியதுடன், அங்குள்ள உணவு அரங்கில் உணவு வகைகளை சுவைத்தும் சென்றனர். கண்காட்சி அரங்கு முற்றிலும் குளிரூட்டப்பட்டு உள்ளது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு அரங்கு திறக்கப்பட்டு இரவு 9 மணியுடன் கண்காட்சி நிறைவுபெறுகிறது.