ஈரோடு
ஈரோட்டில் போதை மாத்திரை விற்ற வாலிபர் கைது
|ஈரோட்டில் போதை மாத்திரை விற்ற வாலிபர் கைது செய்யப்பட்டாா்.
ஈரோட்டில் போதை மாத்திரை விற்ற வாலிபரை கைது செய்த போலீசார், மேலும் ஒருவரை வலைவீசி தேடி வருகின்றனர்.
போதை ஊசி பயன்பாடு
ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக போதை ஊசி பயன்பாடு அதிகரித்து வருகிறது. குறிப்பாக இளைஞர்கள், இளம்பெண்கள் அதிகமாக இதை பயன்படுத்தி வருகின்றனர். எனவே போதைக்காக பயன்படுத்தப்படும் மாத்திரைகளும் கள்ளச்சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது.
இதை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீசாருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் உத்தரவிட்டு உள்ளார். மேலும், போதை மாத்திரை விற்பனை செய்பவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும் என்றும் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
இந்தநிலையில் ஈரோடு சாஸ்திரிநகர் பகுதியில் போதை மாத்திரை விற்பனை செய்யப்படுவதாக சூரம்பட்டி போலீசாருக்கு நேற்று முன்தினம் ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது சந்தேகப்படும்படி வாலிபர் ஒருவர் நின்றிருந்தார். அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
கைது
விசாரணையில் அவர் ஈரோடு சாஸ்திரிநகர் கல்யாணசுந்தரம் வீதியை சேர்ந்த யுவராஜ் என்பவரின் மகன் ஸ்ரீநாத் (வயது 19) என்பதும், அவரிடம் சில மாத்திரைகள் இருந்ததும் தெரியவந் தது. அதை கைப்பற்றி போலீசார் சோதனையிட்டபோது, அது வலிநிவாரணி மாத்திரை என்பதும், போதை ஊசியில் பயன்படுத்துவதற்காக ஸ்ரீநாத் விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து போதை மாத்திரையை விற்பனை செய்ததாக ஸ்ரீநாத்தை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து 100 மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.
கைதான ஸ்ரீநாத்திடம் நடத்திய விசாரணையில், ஈரோட்டை சேர்ந்த ஹரிஷ் என்பவரிடம் இருந்து போதை மாத்திரையை வாங்கியதாக தெரிவித்தார்.
ஹரிஷை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். ஹரீஸ் மீது ஏற்கனவே சூரம்பட்டி போலீசில் போதை மாத்திரை விற்ற வழக்கு நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.