ஈரோடு
ஈரோடு ரெயில் நிலையத்தில் வாரணாசி பயணிகளுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு
|ஈரோடு ரெயில் நிலையத்தில் வாரணாசி செல்லும் பயணிகளுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
ஈரோடு ரெயில் நிலையத்தில் வாரணாசி செல்லும் பயணிகளுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
வாரணாசி பயணிகள்
உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் காசி தமிழ் சங்கமம் என்ற நிகழ்ச்சியை நேற்று முன்தினம் பிரதமர் நரேந்திரமோடி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தமிழ்நாட்டில் இருந்து ஏராளமானவர்கள் வாரணாசிக்கு செல்கிறார்கள். இந்த நிலையில் கர்நாடகா மாநிலத்தில் நேற்று முன்தினம் ஆட்டோவில் இருந்த மர்ம பொருள் வெடித்தது.
இந்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து கர்நாடகா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் பாதுகாப்பு பணிகள் பலப்படுத்தப்பட்டு உள்ளது.
இதற்கிடையே காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்றவர்களுக்கும் தமிழகத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. எர்ணாகுளம்-பாட்னா எக்ஸ்பிரஸ் ரெயிலில் வாரணாசி செல்லும் பயணிகளுக்காக கூடுதலாக 3 பெட்டிகள் இணைக்கப்பட்டன. இதில் கோவையில் இருந்து 52 பயணிகள் வாரணாசி செல்வதற்காக ரெயிலில் ஏறினார்கள். இந்த ரெயில் நேற்று காலை 6.10 மணிக்கு ஈரோடு ரெயில் நிலையம் முதலாவது நடைமேடையில் வந்து நின்றது.
போலீஸ் பாதுகாப்பு
கர்நாடகா மாநிலத்தில் மர்ம பொருள் வெடித்ததன் எதிரொலியாக வாரணாசி செல்லும் பயணிகளுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டது. அதன்படி ஈரோட்டுக்கு வந்த எர்ணாகுளம்-பாட்னா எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு ஈரோடு மாவட்ட குற்ற ஆவணங்கள் பதிவேடு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு சேகர் தலைமையில் சட்டம்-ஒழுங்கு பிரிவு போலீசார், ரெயில்வே போலீசார், ரெயில்வே பாதுகாப்பு படையினர், ஆயுதப்படை போலீசார், மோப்ப நாய் பிரிவு, வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் செயலிழத்தல் பிரிவு போலீசார் என மொத்தம் 57 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டார்கள்.
இந்த ரெயில் 6.35 மணிக்கு புறப்பட்டு செல்லும் வரை அவர்கள் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் ஓடும் ரெயிலிலும் பாதுகாப்பு போடப்பட்டது. ஈரோடு ரெயில் நிலையத்தில் திடீரென போலீசார் குவிக்கப்பட்டதால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.