ஈரோடு
ஈரோட்டில் போதை ஊசி விற்ற 2 வாலிபர்கள் கைது
|ஈரோட்டில் போதை ஊசி விற்ற 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
ஈரோட்டில் போதை ஊசி விற்ற 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
போதை ஊசி
ஈரோடு கருங்கல்பாளையம் பெரிய மாரியம்மன் கோவில் அருகில் சிலர் போதை ஊசிகளை விற்பனை செய்து வருவதாக ஈரோடு கருங்கல்பாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அப்போது அந்த பகுதியில் சந்தேகப்படும்படியாக 2 வாலிபர்கள் நின்று கொண்டு இருந்தனர்.
போலீசார் அவர்களை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் முன்னுக்குபின் முரணாக பதில் அளித்தனர். இதனால் அவர்களை போலீஸ் நிலையம் அழைத்து வந்து கிடுக்கிப்படி விசாரணை நடத்தினார்கள்.
2 வாலிபர்கள் கைது
விசாரணையில் அவர்கள், ஈரோடு கிருஷ்ணம்பாளையம் கக்கன் நகரை சேர்ந்த சின்னதம்பி என்பவருடைய மகன் அருண் (வயது 21), கருங்கல்பாளையம் கிருஷ்ணன் வீதியை சேர்ந்த மதுசூதனன் என்பவருடைய மகன் கோபாலகிருஷ்ணன் (23) ஆகியோர் என்பதும், அவர்கள் போதை ஊசியை விற்பனை செய்ததும் தெரியவந்தது.
அதாவது அவர்கள் வலி நிவாரண மாத்திரைகள் மற்றும் இருமல் மருந்து ஆகியவற்றை தண்ணீரில் கரைத்து அதை ஊசி மூலம் நிரப்பி விற்பனை செய்து வந்துள்ளனர். இதற்காக அவர்கள் வெளி மாநிலத்தில் இருந்து மாத்திரை, ஊசி போன்றவற்றை வாங்கி ஈரோட்டில் அதிக விலைக்கு விற்றதும் தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அருண், கோபாலகிருஷ்ணன் ஆகியோரை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 10 மாத்திரைகள், 2 ஊசிகள் பறிமுதல் செய்யப்பட்டன.