சென்னை விமான நிலையத்தில் ரூ. 95 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல் - ஒருவர் கைது
|சென்னை விமான நிலையத்தில் அபுதாபியில் இருந்து கடத்தி வரப்பட்ட தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
ஆலந்தூர்,
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் பெரும் அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்க இலாகா அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சுங்க இலாகா அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர்.
அப்போது அபுதாபியில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளை சோதனை செய்தனர். அப்போது சென்னையை சேர்ந்த 30 வயது வாலிபர் மீது சந்தேகம் கொண்டு விசாரித்தனர். அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் அவரது உடமைகளை சோதனை செய்த போது எதுவும் இல்லை.
இதையடுத்து அவரை தனியறைக்கு அழைத்து சென்று சோதனை செய்த போதும் எதுவும் இல்லை. மீண்டும் உடமைகளை சோதனை செய்த போது எலக்ட்ரிக் மோட்டார் இருந்ததது. இந்த மோட்டார் வழக்கத்துக்கு மாறாம சற்று கனமாக இருந்தது.
இதையடுத்து எலக்ட்ரிக் மோட்டாரை உடைத்து பார்த்த போது அதில் உருளை போல் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டு பிடித்தனர். ரூ. 95 லட்சத்தி 15 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 796 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக வாலிபரை சுங்க இலாகா அதிகாரிகள் கைது செய்து கடத்தல் பிண்ணனியில் உள்ளவர்கள் யார்? என விசாரித்து வருகின்றனர்.