செங்கல்பட்டு
செங்கல்பட்டு ரெயில் நிலையத்தில் ரெயிலில் 6 கிலோ கஞ்சா சிக்கியது
|செங்கல்பட்டு ரெயில் நிலையத்தில் விரைவு ரெயிலில் 6 கிலோ கஞ்சா சிக்கியது.
ஆந்திர மாநிலம் காச்சிகுடாவில் இருந்து செங்கல்பட்டு வரை தினந்தோறும் சர்க்கார் விரைவு ரெயில் இயக்கப்படுகிறது. நேற்று காலை வழக்கம் போல செங்கல்பட்டுக்கு வந்த சர்க்கார் விரைவு ரெயில் நடைமேடையில் நிறுத்தப்பட்டு இருந்தது. மீண்டும் மாலை செங்கல்பட்டில் இருந்து காச்சிகுடா வரை ரெயில் இயக்கப்பட உள்ள நிலையில் ரெயில்வே ஊழியர்கள் ரெயிலை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது ரெயிலின் முன் பகுதியில் இருந்த முன்பதிவு செய்யப்படாத பயணிகள் ஏறும் பெட்டியில் உள்ள ஒரு இருக்கையின் கீழே பை ஒன்று இருப்பதை பார்த்த ரெயில்வே துப்புரவு ஊழியர்கள் செங்கல்பட்டு ரெயில்வே பாதுகாப்பு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து அங்கு வந்த போலீசார் பையை சோதனை செய்தபோது அதில் 3 பாக்கெட்டுகளில் பேக்கிங் செய்யப்பட்ட கஞ்சா பொட்டலங்கள் இருப்பது தெரிய வந்தது.
தொடர்ந்து அதனை பறிமுதல் செய்த போலீசார் போலீஸ் நிலையத்துக்கு எடுத்து சென்றனர். 6 கிலோ எடையுள்ள கஞ்சாவை காஞ்சீபுரம் போதைபொருள் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைக்க உள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து கஞ்சா கடத்தி வந்தவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.