தேனி
ஆண்டிப்பட்டி மாா்க்கெட்டில் மல்லிகை பூ கிலோ ரூ.1,000-க்கு ஏலம் போனது :விவசாயிகள் மகிழ்ச்சி
|தமிழ் புத்தாண்டையொட்டி, ஆண்டிப்பட்டி மார்க்கெட்டில் மல்லிகை பூ கிலோ ரூ.1,000-க்கு ஏலம் போனது.
ஆண்டிப்பட்டி அருகே உள்ள தெப்பம்பட்டி, பாலக்கோம்பை, கொத்தப்பட்டி, சித்தார்பட்டி, கதிர்நரசிங்கபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பூக்கள் சாகுபடி அதிகளவில் நடைபெறுகிறது. இங்கு விளையும் பூக்கள் ஆண்டிப்பட்டி பூ மார்க்கெட்டில் ஏலம் முறையில் விற்பனை செய்யப்பட்டு தேனி மாவட்டத்தின் பிற பகுதிகள், வெளி மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
இந்நிலையில் தமிழ் புத்தாண்டையொட்டி, பூக்களின் தேவை அதிகரித்ததால் அதன் விலையும் அதிகரித்தது. அதன்படி ஆண்டிப்பட்டி மார்க்கெட்டில் மல்லிகை பூ, கனகாம்பர பூவின் விலை கிடுகிடுவென உயர்ந்தது. நேற்று முன்தினம் கிலோ ரூ.400-க்கு விற்பனையான மல்லிகை, கனகாம்பர பூக்கள் நேற்று காலை கிலோ ரூ.1,000-க்கு ஏலம் போனது. உதிரி மல்லிகை பூக்களின் விலை அதிகரித்ததால் சரமாக தொடுத்து சில்லறையில் விற்கப்பட்ட பூக்களின் விலையும் அதிகரித்து காணப்பட்டது.
இதேபோல் நேற்று கிலோ ரூ.20-க்கு ஏலம் போன செண்டுமல்லி, கோழிகொண்டை பூக்கள் ரூ.50-க்கும் ஏலம்போனது. பூக்களின் விலை அதிகரித்ததால் ஆண்டிப்பட்டி பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.