ஈரோடு
ஈரோட்டில் உள்ள டிபார்ட்மெண்ட் ஸ்டோரில்6½ கிலோ காலாவதியான உணவு பொருட்கள் பறிமுதல்உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நடவடிக்கை
|ஈரோட்டில் உள்ள டிபார்ட்மெண்ட் ஸ்டோரில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நடத்திய ஆய்வில் 6½ கிலோ காலாவதியான உணவு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
ஈரோட்டில் உள்ள டிபார்ட்மெண்ட் ஸ்டோரில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நடத்திய ஆய்வில் 6½ கிலோ காலாவதியான உணவு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
சிறுமிக்கு உடல் நலக்குறைவு
ஈரோடு சூரம்பட்டிவலசு ராஜாஜி 2-வது வீதியை சேர்ந்த கிஷோர்குமார் (வயது 35) என்பவர் கடந்த 1-ந் தேதி ஈரோடு பெருந்துறைரோடு ஆசிரியர் காலனியில் உள்ள ஒரு பிரபல டிபார்ட்மெண்ட் ஸ்டோரில் கடலை மிட்டாய் வாங்கி உள்ளார். அந்த மிட்டாயை சாப்பிட்ட அவரது 4 வயது மகளுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அப்போது கடலை மிட்டாயை பார்த்தபோது, அது காலாவதியாகி இருந்தது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின்பேரில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட டிபார்ட்மெண்ட் ஸ்டோரில் நேற்று முன்தினம் திடீர் ஆய்வு நடத்தினர். அப்போது கடலை மிட்டாய் இருப்பு இல்லை.
பறிமுதல்
சில உணவு பொருட்கள் தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதையடுத்து அதிகாரிகள் சோதனையிட்டபோது, அதில் காலாவதியான பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து 6½ கிலோ உணவு பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும், டிபார்ட்மெண்ட் ஸ்டோரை சுகாதாரமாக பராமரிக்க வேண்டும் என்று அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
நேற்று காலையில் டிபார்ட்மெண்ட் ஸ்டோரை தூய்மை செய்த பிறகு அதிகாரிகள் சென்று பார்வையிட்டனர். அதையடுத்து வியாபாரம் செய்ய அனுமதி அளித்தனர். மேலும், காலாவதியான பொருட்களை விற்பனை செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.