மயிலாடுதுறை
முன்னாள் ஊராட்சி தலைவர் கொலை வழக்கில் உதவியாளருக்கு ஆயுள் தண்டனை
|சீர்காழி அருகே தென்னலக்குடி முன்னாள் ஊராட்சி தலைவர் கொலை வழக்கில் அவரின் உதவியாளருக்கு ஆயுள் தண்டனை விதித்து மயிலாடுதுறை கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.
மீன் பிடித்ததில் தகராறு
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா தென்னலக்குடி ஊராட்சி காரைமேடு கிராமத்தை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன்(வயது 50). அ.தி.மு.க. முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர். இவர் தன்னிடம் உதவியாளராக இருந்த அதே பகுதியை சேர்ந்த இமானுவேல்(39) பெயரில் அப்பகுதியில் உள்ள சாவடிகுளத்தை ஏலம் எடுத்து மீன் வளர்த்து வந்தார். மீனை இமானுவேல் பிடித்து சென்றதால் இருவருக்கும் இடையே விரோதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த 2020- ம் ஆண்டு ஜூலை 1-ந் தேதி மீண்டும் மீன் பிடித்தது தொடர்பாக இருவருக்கு இடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதில் ஆத்திரமடைந்த இமானுவேல் தனது கையில் வைத்திருந்த கத்தியால் ராமகிருஷ்ணனை குத்தியுள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த ராமகிருஷ்ணன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
ஆயுள் தண்டனை
இதுகுறித்து வைத்தீஸ்வரன் கோவில் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து இமானுவேலை கைது செய்தனர். இந்த வழக்கின் விசாரணை மயிலாடுதுறை மாவட்ட அமர்வு கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்து வந்த நீதிபதி ராஜவேலு நேற்று தீர்ப்பு வழங்கினார்.
அந்த தீர்ப்பில், குற்றம் சாட்டப்பட்ட இமானுவேலுக்கு ஆயுள் தண்டனையும் ரூ.1000 அபராதமும், அதனைக் கட்டத் தவறினால் மேலும் 3 மாதம் சிறை தண்டனையும் விதித்தார். இதனையடுத்து இமானுவேலை போலீசார் திருச்சி மத்திய சிறையில் அடைக்க அழைத்துச் சென்றனர்.இந்த வழக்கில் அரசு தரப்பில் மாவட்ட குற்றவியல் அரசு வக்கீல் சேயோன் ஆஜரானார் என்பது குறிப்பிடத்தக்கது.