உதவி பேராசிரியர் பணியிடங்கள்: விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு
|இணையவழி வாயிலாக விண்ணப்பிக்க அடுத்த மாதம் 15-ந்தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், கல்வியியல் கல்லூரிகளில் சுமார் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உதவி பேராசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக சொல்லப்படுகிறது.
இதில் சுமார் 2,300-க்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு கடந்த 2019-ம் ஆண்டு வெளியிடப்பட்டது. பின்னர் அது கோர்ட்டில் வழக்குகள் தொடர்பாக நடத்த முடியாமல் போனது.
இந்த நிலையில் 3 ஆயிரத்து 921 நடப்பு காலிப் பணியிடங்கள், 79 பின்னடைவு காலிப் பணியிடங்கள் என மொத்தம் 4 ஆயிரம் உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.) கடந்த மார்ச் மாதம் 14-ந்தேதி வெளியிட்டது. தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் ஏப்ரல் மாதம் 29-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அப்போது தெரிவிக்கப்பட்டு இருந்தது.
அதன்படி, நாளையுடன் (திங்கட்கிழமை) அவகாசம் நிறைவு பெற இருந்த நிலையில், இணையவழி வாயிலாக விண்ணப்பிக்க அடுத்த மாதம் (மே) 15-ந்தேதி மாலை 5 மணி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டு இருப்பதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு வருகிற ஆகஸ்டு மாதம் 4-ந்தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கும் தேர்வர்கள் தேர்வுக்கு முன்னதாக உதவி பேராசிரியர்களுக்கு நடத்தப்படும் மாநில தகுதித் தேர்வில் (செட்) கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதில் தகுதி பெறுபவர்கள் மட்டுமே ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் போட்டித் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள் எனவும் தேர்வு வாரியம் தெரிவித்திருக்கிறது. அதன்படி, செட் தேர்வு வருகிற ஜூன் மாதம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.