திருப்பூர்
ஊர்க்காவல் படைவீரர் உள்பட 2 பேர் பலி
|காங்கயம் அருகே மோட்டார்சைக்கிள் மீது அரசு பஸ் மோதிய விபத்தில் ஊர்க்காவல் படை வீரர் உள்பட 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த விபத்து குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
ஊர்க்காவல் படை வீரர்
திருப்பூர் மாவட்டம் காங்கயத்தை அடுத்த முத்தூர் வரட்டுகரை பகுதியைச் சேர்ந்த சக்திவேல் என்பவரது மகன் சத்தியமூர்த்தி (வயது 29). திருமணமாகாத இவர் வெள்ளகோவில் போலீஸ் நிலையத்தில் ஊர்க்காவல் படை வீரராக வேலை பார்த்து வந்தார். இவருடைய உறவினர் அதே பகுதியை சேர்ந்த பழனிசாமி என்பவரது மகன் சூர்யா (23). திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனத்தில் டெய்லராக வேலை செய்து வந்தார். இவர்கள் 2 பேருக்கும் திருமணமாகவில்லை.
இந்த நிலையில் சத்தியமூர்த்தி மற்றும் சூர்யா 2 பேரும் ஒரு மோட்டார் சைக்கிளில் நேற்று காங்கயம் அருகே படியூரில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விஷேசத்திற்காக சென்றனர். பின்னர் அங்கிருந்து நேற்று இரவு 2 பேரும் மோட்டார் சைக்கிளில் காங்கயம் நோக்கி திருப்பூர் சாலை வழியாக வந்தனர். மோட்டார் சைக்கிளை சத்தியமூர்த்தி ஓட்டி வந்தார். பின் இருக்கையில் சூர்யா பின்னால் அமர்ந்து வந்தார்.
2 பேர் பலி
இவர்களது ேமாட்டார்சைக்கிள் காங்கயம் - திருப்பூர் சாலை, கரட்டுப்பாளையம் பிரிவு அருகே இரவு 7.45 மணிக்கு வந்து கொண்டிருந்தது. அப்போது எதிரே காங்கயத்தில் இருந்து திருப்பூர் நோக்கி அரசு டவுன் பஸ் ஒன்று சென்றது. இந்த டவுன் பஸ்சுக்கு பின்னால் மற்ெறாரு டவுன் பஸ் சென்றது. பின்னால் சென்று கொண்டிருந்த டவுன் பஸ், அதற்கு முன்னால் சென்ற பஸ்சை முந்தி செல்ல முயன்றபோது எதிர்பாராத விதமாக சத்தியமூர்த்தி, சூர்யா சென்ற மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.
இந்த கோர விபத்தில் சத்தியமூர்த்தி மற்றும் சூர்யா ஆகிய 2 பேருக்கும் தலை மற்றும் கை, கால்களில் பலத்த காயம் ஏற்பட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். உடனே அருகில் இருந்தவர்கள் அவர்கள் 2 பேரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு 2 ேபரையும் பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர்கள் இருவரும் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த விபத்து குறித்து காங்கயம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காங்கயம் அருகே அரசு பஸ் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் ஊர்க்காவல் படை வீரர் உள்பட 2 பேர் உயிரிழந்த சம்பவம் காங்கயம் பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.