< Back
மாநில செய்திகள்
சொத்து குவிப்பு வழக்கு: அமைச்சர் கீதாஜீவன் உட்பட 5 பேர் விடுவிப்பு
மாநில செய்திகள்

சொத்து குவிப்பு வழக்கு: அமைச்சர் கீதாஜீவன் உட்பட 5 பேர் விடுவிப்பு

தினத்தந்தி
|
14 Dec 2022 12:50 PM IST

சொத்து குவிப்பு வழக்கில் அமைச்சர் கீதாஜீவன் உட்பட 5 பேர் விடுவித்து தூத்துக்குடி தலைமை குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடி,

1996-ம் ஆண்டு முதல் 2001-ம் ஆண்டு வரை திமுக ஆட்சி காலத்தில் தூத்துக்குடி எம்.எல்.ஏவாக இருந்தவர் தற்போதைய அமைச்சர் கீதா ஜீவனின் தந்தை என்.பெரியசாமி. அவர் வருமானத்திற்கு அதிகமாக ரூ2.31 கோடி ரூபாய் சொத்து குவித்ததாக தெரிவிக்கப்பட்டது. அப்போது பஞ்சாயத்து தலைவராக இருந்த கீதா ஜீவனும் இவ் வழக்கில் சேர்க்கப்பட்டார்.

இந்த வழக்கில் 2003-ம் ஆண்டு ஜூலை மாதத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அதில் என்.பெரியசாமி மீது முதன்மை குற்றம்சாட்டப்பட்டிருந்தது. 2-வது என்.பெரியசாமி மனைவி எபினேசர், 3-வது மகன் ராஜா, 4-வதாக தற்போதைய தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன், 5-வதாக அமைச்சர் கீதா ஜீவனின் கணவர் ஜீவன் ஜேக்கப், 6-வதாக கீதா ஜீவன் ஆகியோர் சேர்க்கப்பட்டனர்.

இந்த வழக்கு தூத்துக்குடி தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இவ்வழக்கில் நீதிபதி குருமூர்த்தி இன்று தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் கீதாஜீவனின் தந்தை உயிரிழந்த நிலையில், மீதமுள்ள 5 பேர் இன்று நீதிமன்றத்தில் ஆஜரானார்கள். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி குருமூர்த்தி வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கூறப்படுவது நிரூபிக்கப்படவில்லை என கூறி 5 பேரும் விடுதலை செய்யப்படுவதாக அறிவித்தார்.

நீதிமன்றத்தில் இருந்து வெளிவந்த அமைச்சர் கீதாஜீவன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது நீதி கிடைத்துள்ளதாகவும், நியாயம் வென்றுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்