ஆ.ராசா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு: பிப்ரவரி 22ம் தேதிக்கு ஒத்திவைப்பு...!
|இந்த வழக்கு நீதிபதி கே.ரவி முன்பாக இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, திமுக எம்.பி.ஆ.ராசா தவிர மற்றவர்கள் நேரில் ஆஜராகினர்.
சென்னை,
திமுக முன்னாள் மத்திய மந்திரியும் , நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா, வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்களை குவித்ததாக குற்றம்சாட்டி, கடந்த 2015ம் ஆண்டு சிபிஐ வழக்குப்பதிவு செய்தது.
இந்த வழக்கில் ராசா மற்றும் அவரது குடும்பத்தினர் உள்பட 16 பேருக்கு எதிராக குற்றம் சாட்டப்பட்டது கடந்த மாதம் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில் வருமானத்தை விட 579% அதிகமாக, 5 கோடியே 53 லட்ச ரூபாய் அளவிற்கு சொத்துக்களை குவித்துள்ளதாக சிபிஐ தெரிவித்துள்ளது.
இந்த வழக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்பி, எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. கடந்தமுறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ஆ.ராசா உள்ளிட்ட ஐந்து பேருக்கும் குற்றப்பத்திரிக்கை நகல்கள் வழங்கப்பட்டன.
இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி கே.ரவி முன்பாக இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, திமுக எம்.பி.ஆ.ராசா தவிர மற்றவர்கள் நேரில் ஆஜராகினர். நாடாளுமன்ற கூட்டதொடர் நடைபெற்று வருவதால் இன்று நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று ஆ.ராசா தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, வழக்கு விசாரணையை பிப்ரவரி 22ம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.
இந்த வழக்கில் ராசா மற்றும் அவரது குடும்பத்தினர் உள்பட 16 பேருக்கு எதிராக குற்றம் சாட்டப்பட்டது.